அடித்து அடித்துத் துவைக்கும் போது
.......அழுக்கு நீங்கும்
ஆடைதானே
விடியல் நேர வெளிச்சம் போல
.......வனப்பாய்த் தூய்மை பெற்றிடுமே!
கடிதாய் சுத்தி தாக்க தாக்க
.......கனத்த சுவற்றில் இறங்கிடுமே!
கொடியோர் நம்மைத் தாக்க வந்தால்
.......கொவ்வைச் சிரிப்பால் தாங்கிடுவோம்!
(1)
குனிய குனிய குட்டு வைக்கும்
.......குள்ள நரிகள் குட்டட்டும்!
பனியைக் கரைக்கும் ஆற்றல் இருந்தும்
.......பனியால் மறையும் பகலவனும்!
இனிமை யற்றுப் பேசும் பேச்சும்
......இடியாய் நம்மைத் தாக்கிடுமே!
கனிவாய் அமைதி காத்தால் போதும்!
........கடுஞ்சொல் பலத்தை இழந்திடுமே!
(2)
புயலைத் தாங்கும் நாணல் போல
......பொறுத்தால் தாக்கம் குன்றிடுமே!
வயலும் ஏரின் தாக்கந் தன்னை
......வாகாய் ஏற்று
விளைந்திடுமே!
முயன்றும் இழிவே பெற்றும் கர்ணன்
......முடிவில் சிகரம் கண்டானே!
பயத்தை அகற்றி வைத்தால் போதும்
.......பகையை வீழ்த்தி வென்றிடுவோம்!
(3)
த.ஏமாவதி
கோளூர்