நாளையென்ன நடக்குமென்றும் நாடு என்ன ஆகுமென்றும்
சிந்தித்துத் தளரவேண்டாம் கவலை ஒன்றும் உனக்கு வேண்டாம்.
நேரலையில் வகுப்பென்றும் கற்பியாது தேர்வென்றும்
நினைத்து நீ குழம்பிப்போய் விழித்தபடி படுக்க வேண்டாம்.
ஊரடங்கு தொடர்கதையா கிருமி நாசம் விடுகதையா
என்று எல்லாம் நினைத்தவாறே உன்னை நீ வருத்த வேண்டாம்.
உண்பதற்கு உணவுண்டா குடிப்பதற்குப் பாலுண்டா
கிருமித் தொற்று அதிலுண்டா என்ற பயம் சிறிதும் வேண்டாம்.
பயமின்றி வாழ்கின்ற வாழ்க்கை இனி இங்குண்டா
பரவாமல் தடுப்பதற்கு மருந்துண்டா கேள்வி வேண்டாம்.
எத்தனை பேர் இருப்பார்கள் எத்தனை பேர் இறப்பார்கள்
என்று எண்ணி எண்ணி நீயும் தூங்காமல் இருக்க வேண்டாம்.
அதை நினைத்து கவலையுற கவலையோடு தினம் உழல
கோடி மக்கள் இருக்கிறார்கள்
நானுமுண்டு வருந்த வேண்டாம்.
எனை மறந்து நான் உறங்க உனை மறந்து நீ உறங்கு
உறங்காமல் விழித்திருந்து எனை வருந்த வைக்க வேண்டாம்
தளர்வின்றி நீ உறங்கத் தாலாட்டு நான் பாடவா
கண்மணியே நீ உறங்கத் தாலாட்டு நான் பாடவா.
*கிராத்தூரான்