தங்கத்தின் விலையோ கிடுகிடுவென்று உயர்ந்து
மகள்கள் உள்ள பெற்றோரை நடுநடுங்க வைக்கிறது.
எரிபொருளின் விலையோ நாளுக்கு நாள் குதித்து
என்ன செய்வோம் இனியென்று யோசிக்க வைக்கிறது.
சீன வைரஸ் தாக்கமோ குதி குதியென்று குதித்து
இனி எத்தனை நாளென்றுக் குலை நடுங்க வைக்கிறது.
மரணிப்போர் எண்ணிக்கை மனதுக்குக் கிலி கொடுத்து
அடுத்தது யார் என்றுக் கேள்வி கேட்க வைக்கிறது.
எல்லையிலே எம் தேச வீரர்கள் படுகொலையும்
எப்போதுமில்லாத அளவிலே உச்சத்தில்.
அண்டை நாடாய் இருப்பவர்கள் சண்டைபோடத் துவங்குவதும்
அதை எதிர்க்க வீரர்களைக் குவிப்பதும் உச்சத்தில்.
உச்சத்தில் அது என்றும் உச்சத்தில் இது என்றும்
தினம் தோறும் கேட்போர்கள் அச்சமும் உச்சத்தில்.
அச்சத்தில் இருப்பவர்கள் அச்சத்தைப் போக்குவது
உச்சத்தில் இருப்பவர்கள் கடமையென்று உணரவேண்டும்.
இல்லையென்றால் மக்களின் வெறுப்பு கூடச் சென்றுவிடும்
இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில்.
*கிராத்தூரான்