என்னை நம்பி வந்தவள்
என்னுடனே வந்தவள்
எனக்காக வந்தவள்
எனக்காக வாழ்ந்தவள்
மிதிலையின் மைதிலி
அயோத்தியின் சீதை
நினைக்கின்றான் இராமன்
நிலை குலைந்த போது.
பிறந்த வீட்டின் பெருமை தனைப்
புகுந்த வீட்டில் காத்தவள்
இராமன் இருக்குமிடம்
அயோத்தியாய்க் கண்டவள்
கணவனுக்காய் இராஜபோகம்
அனைத்தையும் துறந்தவள்
ஜனகன் மகள் ஜானகியாம்
இராமன் என் சீதை.
நாடு போற்றும் நாயகியை
நான் காண வேண்டும்
ஜானகியை ஜனகன் முன்
நான் நிறுத்த வேண்டும்
மிதிலையின் திருமகளைத்
திருப்பித் தரவேண்டும்
அயோத்தியின் மருமகளை
நான் காக்க வேண்டும்.
கடமையா பாசமா
இராமனின் தேடல்
உரிமைக்கா பெருமைக்கா
இராமனின் தேடல்
வீரத்தை நிலை நாட்டவா
தாரத்தைச் சிறை மீட்கவா
மன பாரத்தைக் குறைக்கவா
இராமனின் தேடல்.
மணாளனின் மனைவியா
மன்னனின் இராணியா
மிதிலையின் புதல்வியா
அயோத்தியின் தலைவியா
மக்களின் உரிமையா
தேசத்தின் பெருமையா
இவையனைத்தும் சேர்ந்ததா
இராமன் தேடிய சீதை.
இராமனின் மனதில் யார்
இராமன் தேடிய சீதை.
*கிராத்தூரான்