தலைகுனிந்து நிற்கும்
தங்கநிற நெற்பயிர்களை
வருடிக்கொடுத்தவாறே
வயல் வரப்புகளூடே
வழிந்து செல்லும்....!
தலைநிமிர்ந்து நிற்கும்
தென்னையிளங்கீற்றுகளை
யாழென வருடி ஸ்ருதி சேர்த்து
அதன் மௌனம் கலைத்து
அலையெனச் செல்லும்.....!
கழனியில் உழைத்துக்களைத்த
உழவனின் வியர்வைத்துளிகளை
கதிரவனைக் கண்ட பனித்துளியாய்
கரைத்துவிட்டு
கலகலவென சிரித்துச்செல்லும்...!
இன்று கனிந்த பழங்களுக்கும்
நாளை மலரும் மொட்டுக்களுக்கும்
வாழ்த்துச்சொல்லி
வணங்கிச்செல்லும்.....!
சாதிமதம் கடந்து சாத்வீக
சாரல் சுமந்து
இதயங்களைத்திருடிச்செல்ல
இளகியே இயல்பாய் வருகிறது......
இயற்கையின் அன்பால்
வளர்ந்த *செல்லக் குழந்தையாம்*
தென்றல்!
வத்சலா