கஞ்சிக்கு வழியின்றிக் களைத்துப் போய் நிற்பவரைக்
கண்டாலே கண்களிலே கண்ணீர் எட்டிப் பார்ப்பதும்,
உண்டுவிட்டு உளம் மகிழ்ந்து புன்சிரிப்பை பூப்பவரை
நெஞ்சோடு அணைத்தவாறே நிம்மதியைக் காட்டுவதும்,
யாருக்கோ ஆபத்து என்றறிந்த வேளையிலே
எவரையும் எதிர்பாராது முன்நின்று உதவுவதும்,
பேருக்காய் பெருமைக்காய் எதையுமே செய்யாமல்
யாருக்கும் தெரியாமல் ஊருக்கு உதவுவதும்
எதையும் எதிர் பாராமல் எவருக்கும் அஞ்சாமல்
எது நலம் என்றுணர்ந்து செய்கின்றதும் பொதுநலம்.
ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு பெருமையாய்ச் சொல்வதும்
ஊரெல்லாம் சுவரொட்டி வைத்துதவி செய்வதும்
பாருக்கே அதைப் பகிர்ந்து பாராட்டைப் பெறுவதும்
பாராட்டுப் பத்திரத்தை, விருதை வாங்கிச் சேர்ப்பதும்
எதிர்காலம் இது உதவும் என்றெண்ணிச் செய்வதும்
சுயநலமே பொது நலத்தின் அடித்தளமாய் அமைவதும்
வெகுமக்கள் பார்வையிலே இன்றதுதான் பொது நலம்
பொதுவாக மாறிவிட்டப் புதுமையான பொதுநலம்.
கிராத்தூரான்
சுலீ. அனில் குமார்