Now Online

Sunday, 30 December 2018

மலரட்டும் மனித நேயம்மலராக வேண்டுமெனில்
மொட்டொன்று  வரவேண்டும்,
மொட்டுவர வேண்டுமெனில்
செடிகள் தழைக்கவேண்டும்,
செடிகள் வளரவேண்டுமெனில்
மண்வேண்டும், வளம் வேண்டும்,
அடிப்படையில் இருந்து தானே
ஆரம்பம் வரவேண்டும்.

தாய்வடிக்கும் கண்ணீரோ
சேய்கண்ணில் தெரிவதில்லை,
தாய் மடிந்து எலும்பாகித்
தனயனிடம் கேட்கிறது,
தாய்ப்பாசமே தொலைந்த பின்பு
இங்கு ஏது மனித நேயம்?

உறவொன்று உணவின்றி
உயிர்விட்டுப் போன பின்னும்,
நட்பொன்று நலிவுற்றுக்
கடன் வாழ்வில் உழன்ற பின்னும்,
கண்டுகொள்ள மனமின்றிக்
களிப்பு நாடும் மனிதனிடம்
காலம் கூட கேட்கிறது
இங்கு ஏது மனித நேயம்?

அடிபட்டு துடிதுடித்து அடங்கப்போகும் உயிரிடத்தில்,
பிடுங்கிக் கொண்டு ஓடுகின்ற கடைநிலையைக் காண்கையிலே, கதிரவன் கூடக் கவலையுடன் களமிறங்கிக் கேட்கிறது
எங்கே மறைந்தது மனித நேயம்?

பணத்துக்குக் கொடுக்கின்ற மதிப்பிலே ஒருபாதி,
மனத்துக்குக் கொடுக்கின்ற மனமிருந்தால் போதும்,
கனக்கின்ற இதயங்கள் கனிவுடனே சொல்லும்
மலரட்டும் மனித நேயம்.

தனக்கென்று இல்லாமல் பிறர்க்காக வேண்டாம்,
தனக்குடையதை வைத்துவிட்டுப் பிறர்க்கு மீதியை அளித்தால்,
தயக்கமே இல்லாமல் இயற்கை கூடச் சொல்லும்
மலரட்டும் மனித நேயம்.

பெற்றோரை தெய்வமாக வணங்கவும் வேண்டாம்,
உற்றாரை சரிபாதி யாகக் காணவேண்டாம்,
மற்றோரை மனிதனாக நினைத்தாலே போதும்,
கற்றோர் சொல் வார்த்தை கேட்டு நடந்தாலே போதும்,
மனம் குளிர முகம் மகிழ மனிதகுலம் சொல்லும்
மலரட்டும் மனித நேயம்,
மலரட்டும் மனித நேயம்.

*சுலீ அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி.


சம்பை

ஓடை நிறையச்செழித்திருக்கும்
பூ பூத்தபடி
சம்பை

சம்பைக்குள்
ஒளிந்திருக்கும்
சம்பைக்கோழிகள்

கோழி பிடிக்க
மூச்சடக்கி
நீருக்குள் தவமிருக்கும்
விடலைகள்

ஓடைக்குள் இறங்குகிறார்  அப்பச்சி
விளைந்த சம்பையை
அறுத்துப்போய்
கோடையில்
வீடு வேய

*பொன்.இரவீந்திரன்*


என்ன அலகு இது... இதில் தான் எத்தனை அழகு...


முட்டையிடுவதற்கு...
அடை காப்பதற்கு...
பிறந்த குஞ்சுகளுக்கு....
பத்திரமாய் ஒரு வீடு செய்யும் அலகு...
என்ன அலகு இது.
இதில் தான் எத்தனை அழகு....

தாயின் வலிக்கு நிகர்...
நிகரில்லை உலகிலென்பார்....
உணவுதேடத்தான் மரத்தைக் கொத்துகிறாய்
என நினைத்திருந்த என்
நெஞ்சுக்கு....
தன் இனத்தைக் காப்பதற்கு வீடு சமைத்தாயென நினைக்கும் வேளையில்....

இப்போதும் என் மனசு சொல்கிறது..
என்ன அலகு....
உன்னில் எத்தனை அழகு...

மரத்தையே கொத்தி வீடுசமைத்த உன் அலகில்....
சின்னதாய் ஒரு உணவுத் துணுக்கு...

அதுவும் உனக்கல்ல...
உன் சேய்க்கு...
என்ன அலகு...
இதில்தான் எத்தனை அழகு.

செம்மொழி.சிபிராம்
பெரம்பலூர்


தொட்டில்கட்டிலின் பல்லவிக்குக்
கிடைக்கும் பரிசே
தொட்டில் .....ஆனால்
தவழும் மழலையின்றி
தனிக்காற்று துயில
ஊஞ்சலாடுகின்றன......!
கோயில் மரக்கிளைகளில்
ஏக்கம் மட்டுமே
ஏந்திழைகளின் விடையாய்....???
பிரார்த்தனை
நிறைவடைய வகைக்கொன்றாய் தொட்டில்கள்
விழுந்திடுமே
கோயில்
உண்டியல்களில்......!!!

வெள்ளித்தொட்டில்
வேண்டிய வரத்திற்கு......
தங்கத்தொட்டில்
தங்கச்சிலை பிறப்புக்கு....

பட்டுச்சரிகைத் தொட்டில்
பொக்கிஷம் கிடைத்த
                           தற்கு!
ஏழட்டுக்கு மாளிகையில்
வாரிசு கௌரவத்தொட்டிலாய்!
ஏழைக்குடிசையில் வாரிசு
எட்டுமடிசேலைத்தொட்டி
                                 லாய்!
காதலர் மனதில் என்றும்....
கனவேத்தொட்டிலாய்!
மாணவர் மனதில் அரிய
வெற்றியே தொட்டிலாய்!
பட்டம்பெற்றார் வாழ்வில்....
பணியேத் தொட்டிலாய்....!
பணியேற்றோர் நினைவினில்
திருமணமே தொட்டிலாய்!
திருமணம் புரிந்தோருக்கு....
குழந்தைவரமே தொட்டிலாய்.......
ஓ...... உலகம் உருண்டை
எனும் தத்துவம் மெய்ப்பிக்கப்படுகின்றதோ!!

🌹வத்சலா🌹


மனிதநேயம் மலரட்டும்அண்டை வீட்டாருடன் நேயமே இல்லாத போது
எப்படி வளரும் மனிதநேயம்

பெற்றோரிடத்தில் நேயம் காட்ட முடியாத போது
அயலானிடத்தில் மட்டும் எப்படி மனித நேயம் காட்ட முடியும்

மனிதநேயமென்பது
அதிக செலவழித்து படிக்க வைப்பதோ
அதிக பண உதவி செய்வதோ இல்லை

பாசமான பார்வையும்
பரிவான பேச்சும்
அன்பான அரவணைப்பும் கூட மனிதநேயம் தான்


முடியாத முதியவருக்கு
முடிந்த வரை உதவுதல்

பார்வையற்று பாரில் உள்ள மக்களுக்கு உதவுதல்

வீதியிலே உலா வரும் அழுக்குற்ற
பிள்ளைகளுக்கு உணவளித்தல்

கர்ப்பிணிப் பெண்களோ
முடியாத முதியவர்களுக்கோ
பேருந்தில்
இடமளித்தலும்
மனிதநேயம் தான்


விபத்தில் அடிப்பட்டு
அலறிக் கொண்டிருப்பவரை
மருத்துவமனைக்குஅனுப்பாமல்
செல்பி எடுக்கும் விந்தை உகம்
மனித நேயமெங்கே

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே
தெரியாமல்
கைப்பேசியில் மூழ்கி கிடக்கும் காலமாயிற்று

ஆழிப் பேரலையும்
ஒக்கியும் கஜாவும்
சூறாவளியும் புயலும்
வந்தால் தான்
மனிதநேயம் பூ பூக்குமோ

பருவத்திற்கேற்ப மலர
மனிதநேயம் மல்லிகையும் அல்ல

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர
குறிஞ்சியுமல்ல

பூமியின் ஊற்றைப் போல்
மனிதருக்குள் தானாக ஊற்றெடுக்க வேண்டும்

மனிதநேயத்தை வளர்க்க முடியாது
அது ஒவ்வொருவருக்குள்ளும்இருக்கின்றது
வெளிக்கொணர மறுக்கின்றோம்

மனிதநேயம் மலர
மாற்றம்  ஒன்றே போதும்
பிறரையும் தம்மைப்போல் நினைத்தாலே போதும்

குழந்தைகள் கையில் செல்போன் கொடுப்பதை தவிர்த்து
தனிமையை வெறுத்து கூட்டுக் குடும்பத்தை நேசிக்க பழக்குங்கள்

அன்னை தெரேசாவையும் காந்தியையும் கற்பியுங்கள்

விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையை சொல்லிக் கொடுங்கள்

மனிதநேயம் அங்கிருந்தே ஆரம்பமாகட்டும்

தி.பத்மாசினி


மனிதநேயம்மனிதநேயத்தை
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
ஏழு காடு தாண்டி
கண்டுபிடிக்க வேண்டியதில்லை
பூமிக்கடியில் தோண்ட வேண்டியதில்லை
கடலுக்கடியில் தேட வேண்டியதில்லை
வானத்திலிருந்து வர வேண்டியதுமில்லை

மனிதநேயம் ஓர் உணர்வு
நம்மில் நாமே தேட வேண்டுமே தவிர
பிறரிடம் தேட வேண்டியதில்லை

பசியால் வாடுவோருக்கு
ஒரு பிடி உணவும்

பிணியால் துன்புருவோருக்கு
ஒரு துளி மருந்தும்

மானம் காக்க ஏழைக்கு
ஆங்கோர் ஆடை அளித்தலும்
மனித நேயமே

சுனாமியால் சுற்றம் இழந்தோரைக் கண்டால்
கண்ணில் நீர் பெருக்கெடுக்கிறதே
இதுவும் மனித நேயமே

சோமாலயாவில் உணவின்றி தவிப்போரைக்
கண்டால்
நம் கண் கலங்குகிறது

இதுவும் மனித நேயமே

மனிதநேயம் அனைவரிடமும் உண்டு
நாம் அதை துருப்பிடிக்க வைத்து விடுகின்றோம்

இனியாவது அதை பயன்படுத்தி
நல்லதொரு சமுதாயம் அமைத்திடுவோம்
இளைஞர்களையும் ஊக்குவிப்போம்

மண்ணில் எங்கும் மலரட்டும்

மாசில்லா  மனிதநேயம்


தி.பத்மாசினி


பொடிக் கவிதைகள்

தடை

கைம்பெண்ணின்
தலைமீது
அமர்வதற்கு பூக்கள்
ஒருபோதும் தடைசொல்வதில்லை
ஆனால் மனிதர்கள்தான்.........


இரட்டை இருட்டு

கணவனை இழந்த
கைம்பெண்ணின் இரவுகள் எல்லாம்
இரட்டை இருட்டுகள்!
ஒன்று இரவுக்கு
மற்றது அவள் வாழ்வுக்கு
கண்கள்

மௌனமாய்ப் பேசும் இரட்டைக் கவிதைகள்!


உதடுகள்

பல்முத்துகள் வைக்கப்பட்ட பவளப்பெட்டியின் இரட்டைக் கதவுகள்!


தொடர்வண்டி

போக்குவரத்தில் இது புதுமை!
ஆனால்
இரட்டை எல்லைக் கோடுகளுக்கு
அடிமை!


விழுதுகள்

தாய்வீடென்ற
ஆலமரத்தை விட்டு
மணமாகிச் சென்ற
தங்கைவீடு வரை
அண்ணனின் பாசம்
விழுதுகளாய்த் தொங்கி தங்கையை ஊஞ்சலாட்டும்!

த.ஹேSaturday, 29 December 2018

வாழ்க்கை போர்

புத்தகங்களோடு நிதமும் 

யுத்தம் செய்பவர்

யாரோ

அவரே

வாழ்க்கை யென்னும்

போரில்

வெற்றி 

வாகைச்சூடுவர்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

நினைவுகள் மறக்கவில்லை

கோயிலுக்கு

வெளியே

கழற்றி விட்டுப்போன

புதுச்செருப்பாய்


உன்னை  ஆக்கிரமித்திருக்கின்றன

நான் குறித்த 

என் நினைவுகள்


*பொன்.இரவீந்திரன்*

Friday, 28 December 2018

தொட்டில்அன்பே
உன்னைக் கண்ட நாள்முதலாய்
என்விழிகளைக்
காணவில்லை!
தேடிக் கண்டுக்கொண்டேன்!
உன்னிரு விழித்தொட்டிலிலே
என்விழிகள் மழலையாய்க் கண்வளர்வதைக் கண்டேன்!
பதிலுக்கு என்இதயத் தொட்டிலிலே தாலாட்ட உன்இதயத்தைத் தந்துவிடு!
நாமிருவரும் சேர்ந்து காதல்தொட்டிலிலே
நம்அன்பைத் தாலாட்டிச் சீராட்டி வளர்ப்போமா கண்ணே!

த.ஹேமாவதி
கோளூர்


செதுக்கும் உளி!

நான் காகிதம்
எழுதுகோல் என்னுள் கவிதையைச் செதுக்கும் உளி!

நான் நிலம்
ஏரின் முனை
என்னில் தானியம்
கொழிக்கும் உளி!

நான் துணி
ஊசியின் முனை
என்னை
ஆடையாய்ச் செதுக்கும் உளி!

நான் மனம்
கொடுநாவின் முனை
என்னை பக்குமாய்ச் செதுக்கும் உளி!

நான் காதலன்
உன் விழிமுனை
என்னை
உன் கணவனாய்ச் செதுக்கும் உளி!

அனைத்தையும் கேட்ட கல்
சொல்லியது
நான் கல்
இரும்பின் கூர்முனை எனது உளி!
அதன் செதுக்கலால்
நான் படும் அவதிகளை ஒருபோதும்
வாய்விட்டுச் சொல்லியதில்லை!
என்னைப் போல்
உளியின் வலிகளைத் தாங்குவார் உளரோ? எனச் சொல்லி அமைதியானது!

த.ஹே
கோளூர்


அதுவரை பத்திரமாய் அடங்கியிரு என்கண்ணே!

*அதுவரை பத்திரமாய் இரு!*

வந்துவிட்டேன் என்கண்ணே!
இரை கொண்டுவந்து விட்டேன் பசியாற!
நிதானமாய்
இன்னும் வெகுதூரம் சென்றிருந்தால்
இன்னும் அதிக
இரை கொணர்ந்திங்கு ஊட்டிடுவேன்!
என்செய்வேன்!
தன்னந்தனியாக உன்னைவிட்டுச் செல்ல மனமில்லாத காரணத்தால்  கொஞ்ச தூரத்திலேயே கிடைப்பதை கொத்திக் கொண்டு வந்துவிட்டேன் உன்வாயில் ஊட்ட!
இது உனக்குப் போதாது! பயப்படாதே!இதோ இன்னும் நான் பறந்துச் சென்று உன்பசிதீர பெருந்தீனி கொணர்ந்து வருகிறேன்!ஆனால்
*அதுவரை பத்திரமாய் நீயிருக்கவேண்டுமே!*
வெகுதூரம் நான்பறந்துவரும் ஓசைகேட்டு சட்டென்று தலைநீட்டாதே!
கிட்டத்தில் நான்வந்து உனக்கு அடையாளக்குரல்
எழுப்பிய பிறகேதான் நீ தலையை நீட்டவேண்டும்!
கோட்டான்களும் வல்லூறுகளும் நிறைந்திருக்கும் உலகமடி!
கவனம் சிதறினால் மரணம் நிச்சயமடி!
திரும்பும்வரை என்கவனமெல்லாம் உன்மீதே இருக்கும்.
நீயும் அதுவரை பத்திரமாய்
அடங்கியிரு என்கண்ணே!

*த.ஹேமாவதி*
*கோளூர்*அன்னை ஊட்டுகிறாள் ஊணை

அடர்ந்த பசுமைநிறக் காட்டினிலே
மூங்கில் மரத் தோப்பினிலே
கூடு கட்டி வசித்திருந்தேன்

இயற்கை வந்து பாதியை அழிக்க
மீதியைத் தான் மனிதன் பறிக்க

போக இடமும் இல்லாமல்
போக வழியும்  தெரியாமல்

பறந்து வந்த வேளையிலே
தென்னந்தோப்பும்
கண்ணில் பட
அதிலொன்றை தேர்ந்தெடுத்து
கூடுகட்டி என் பிள்ளைகளை வளர்த்துவந்தேன்

நான் இரைதேட போகையிலே
யாரு வந்து அழைத்தாலும்
வெளியே வாராதே
உன்னைச் சுற்றி இருக்குதப்பா
குள்ளநரிக் கூட்டமொன்று

தாய் பேச்ச கேக்கலன்னா
நீ தனியாயிடுவ
அவர்களுக்கு இரையாயிடுவ

சொன்ன பேச்ச கேட்டபிள்ளைக்கு

அன்னை ஊட்டுகிறாள் ஊணை


தி.பத்மாசினிபடித்ததில் பிடித்த கவிதைகள்

...எனக்குப்பிடித்த கவிதைகள் :

1. "ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது....
எடை குறைவாக...!"

2. "வராந்தாவிலேயே
இருந்த
வயதான தந்தை....

இறந்த பின்
ஹாலுக்குள் வந்தார்
புகைப்படமாய்...!"

3. “வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்..!

அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்..!”

4. " புறாக்கள் வளர்க்கும்
எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும்
சுதந்திரத்தை...."
- நா. முத்துக்குமார்.

5. " பறித்த மலரை
ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன?
கல்லறையில் வைத்தாலென்ன?

மலருக்கென்னவோ
பறித்ததுமே வந்துவிட்டது
மரணம் ! "

6. “சர்க்கரை இல்லை...
கொழுப்பு இல்லை...
எஜமானரோடு
வாக்கிங்
போகுது
ஜிம்மி...!”

7. "வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே...!

வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்...?"
-- மு. மேத்தா.

8. "ஒவ்வொரு முறையும் அவன் அவளை
பிறந்த வீட்டுக்கு அனுப்பும் போதெல்லாம்
திரும்பவும் அவர்களை
ஒன்று சேர்த்து வைக்கிறது
ஹோட்டல் சாம்பார்!"
-S. செல்வகுமார்

9. "பேருந்தில்
சிதறுகிறது நாணயங்கள்....
தேடலுக்குப்பிறகு
கிடைத்தன....
சில நாணயங்கள்
தொலைந்தன...
சிலர் நாணயங்கள்...!"
-ப. உமாமஹெஶ்வரி.

10. "கோழித்திருடனை
ஜெயில்ல போட்டாங்க...
ஜெயில்ல அவனுக்கு
கோழிக்கறி போட்டாங்க..!"
- ஒப்பிலான்.

11. "மாங்கல்யத்தின் மகிமையை
மனைவி அறிவாள் …
மணவாளன் அறிவான் …
அவர்கள் இருவரையும் விட
மார்வாடியே
அதிகம் அறிவான்...!'
-- கவிஞர் தமிழன்பன்.

12. "காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை !"


Thursday, 27 December 2018

மாறாதது

மாறி வரும் 

மனிதர்கள்

மத்தியில்

மாறாதது

உலகம்

மட்டுமே..


உலகிலுள்ள

மனிதர்கள்

மாறிவிட்டனர்..


சொல்லும்

செயலும்

வெல்லும்

செயலாய்

இல்லாமல்

வில்லும்

அம்புமாய்

குத்தி கொல்லும்

சொல்லாகவே

இருந்துக்கொண்டே

இருக்கிறது..


உலகம்

அப்படியேதான்

இருக்கிறது..


மனிதர்கள்

மட்டுமே

மாற்றத்தையும்

ஏமாற்றத்தையும்

விரும்புகிறார்கள்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

இதயம் வடித்த கண்ணீர்கலவரத்தில் இணைந்தோம், கெளரவத்தில் பிரிந்தோம்,,,
உன் வரவும் என் வரவும் ஊரறிய, யாரறிந்து நடந்தோம்,,,,

உறவுக்கு பாலம் போட வந்தேன், உள்ளதை சொல்லி தேடி வந்தேன், தரகுக்காக வந்தவள் போல், பேசிய வார்தைகள் பாய்ந்ததம்மா,,,,,

ஆசைகள் ஆயிரம் மலர்ந்திருக்க,
வார்த்தையின் அம்புகள் பாய்ந்திருக்க,,, மலர்ந்த மலர்கள் சிரித்திடுமோ?
மறுநாள்,
உன்னை நினைத்திடுமோ?

எண்ணிய
தெல்லாம் இதயமடி,
இரு விழி சொல்ல உள்ளபடி,,,
தன்னிறைவடையாமேனியிலே
இது,
"இதயம் வடித்த கண்ணீரடி "

பாலா


குறைகள்

நட்டு வைத்த
விதைகள்
யாவும்
நட்டப்படுவதில்லை..

விட்டுக்கொடுத்த
உறவுகள் யாரும்
விலகிப்
போனதில்லை..

கொட்டும் மழைகள் யாவும்
குறை
சொல்வதில்லை..

மனித மனங்கள்
மட்டுமே
ஒருவரையொருவர்
குறைகளையே
குற்றமாக்குவதில்
குறியாகிப்போனால்
வாழ்வதில்
குறைகளே
மிஞ்சும்..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


குட்டிக் கவிதைகள்மௌன விரதம்

என்று சொல்லி

கைப்பேசியில் மணிக்கணக்கில்

குறுஞ்செய்தி மூலம்

பேசிக் கொண்டே இருக்கிறாள்


+ + + +       +  + + + + +


முள்ளில்லாத ரோசாவைக் கூட 

கண்டுபிடித்து விடலாம்

குத்தல் பேச்சு பேசாமலிருக்கும்

மனிதர்களை கண்டுபிடிப்பது கடினம்+ +  + +     ++   ++   ++


கத்தியின்றி இத்தமின்றி

மற்றவர்களைக் 

கொல்வது 

கடுமையான 

சொற்கள் தான்தி.பத்மாசினி

எங்கே செல்கிறோம் நாம்?வந்தவர் யாரென்று புரியவில்லை,

எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை,

எதற்காக வந்தார் என்றும் சொல்லவில்லை, 

பதறித்தவிக்கிறது ஒரு தாய்மனம்.


எவனோ ஒருவன் அனுப்பிவைத்தான்,

எவரோ இருவர் வந்து நின்றார்,

பெட்டியுடன் புறப்பட்டாள் பெற்றமகள்,

பதற்றத்துடன் தடுக்கிறது பெற்றமனம்.


நிலைகுலைந்தாள் தாக்குதலில் 

தடுக்கமுயன்ற தாயவள்,

கத்தியால் குத்தப்பட்டாள் 

காது குத்தி மகிழ்ந்தவள்,

பாலூற்ற வைத்துவிட்டாள் 

தாய்ப்பால் குடித்து வளர்ந்தவள்,

படுகொலையை அரங்கேற்றினாள் 

காதலில் விழுந்தவள்.


கட்டியவனைக் காவு வாங்கி,

பெற்றவரைச் சிறைக்கனுப்பி,

இன்னொருவனை இனிதே மணந்து

மகிழ்ச்சியிலே திளைக்கிறாள்

இன்னொருவள் மறுபுறம்.


கட்டிக் காத்த கலாச்சாரம் கண்கலங்கி நிற்கிறது,

நாகரீகம் முன் வந்து காவு வாங்கி மகிழ்கிறது,

பிள்ளைகளால் பெற்றவரைக்

கொலைசெய்ய வைக்கிறது,

பெற்றவரைப் பிள்ளைகளைக் 

கொலைசெய்யவும் வைக்கிறது.


எங்கே செல்கிறோம் நாம்?

எங்கு போய் நிற்போம் நாம்?

தெரியவில்லையே இறைவா.....!


சுலீ அனில் குமார்

கே எல் கே கும்முடிப்பூண்டி.


தடுமாற்றம்

நெருஞ்சி மலரின் நிழலிலும்

ஓய்வெடுத்து 

அடுத்த இலக்கைத்தீர்மானிக்கும்

சின்னஞ்சிறு தும்பி


வந்த வழியறியாது

தடுமாறிக்கிடக்கிறது

பெருநகர மொட்டைமாடி

போன்சாய் மரத்தினடியில்


*பொன்.இரவீந்திரன்*

Wednesday, 26 December 2018

மறந்து விட்டோம்


கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கும்

கோள்களை ஆராயும் நாம்

நம் அருகில் இருக்கும்

மனித மனங்களை ஆராய மறந்து விட்டோம்


தனிக் குடும்பத்தை விரும்பி

கூட்டுக் குடும்பங்களை மறந்து ம்

விட்டோம் தொலைத்தும் விட்டோம்அயல் நாட்டு மோகத்தை விரும்பி

நம் பண்பாடு நாகரீகங்களை மறந்து விட்டோம்


ஆங்கிலம் பேசும் ஆசையினால்

தமிழ் மொழியை மறந்தும் விட்டோம்

தமிழை  வளர்க்காமல் விட்டு விட்டோம்


நம் நீராகர உணவை மறந்துவிட்டு

பீட்சா பர்கருக்கு மாறி  விட்டோம்

உடலில் நோயையும் சேர்த்துவிட்டோம்சாதி சாதியென்று

ஒருரோடொருவர் சண்டை போட்டு

நாம் மனித சாதி 

என்பதை மறந்து விட்டோம்


அயல் நாட்டு அறிவியல் அறிஞர்களையும்

இலக்கியவாதிகளையும் புகழும்

 நாம் நம்மூரில்  இருப்பவர்களை மறந்துவிட்டோம்


சமூக சேவை செய்ய ஓடும் நாம்

கண்ணெதிரே இருக்கும் பெற்றோருக்குக

சேவை செய்ய மறந்து விட்டோம்கல்லுக்கும் கட் அவுட்டுக்கூம்

பால் ஊற்றும் நாம்

அழுகின்ற அநாதை குழந்தைக்கு

பால் ஊற்ற மறந்து விட்டோம்


மறந்தவைகளை ஞாபகப்படுத்தி

மறக்காமல் இருப்போம்

இனி மறந்தவைகளைதி.பத்மாசினி

புண்ணியம்

தொலைதூர

மலையுச்சியிலிருந்து 

தரையிறங்கும்

அருவியில்

மிதந்தபடி

பயணிக்கிறது


செல்லுமிடமெல்லாம் 

புண்ணியமாக்கிட

நீ

சூடிய மல்லிகை


*பொன்.இரவீந்திரன்*

முரண்


வறுமையில் வாடும் மக்களின்

பசியாற்ற யோசிக்கும் நாம்

குப்பையில் கொட்டுகிறோம் உணவை


பிச்சை எடுப்போருக்கு தானம் 

செய்ய யோசிக்கும் நாம்

உணவகத்தில் வைப்பதோ டிப்ஸ்உழைக்கும் மக்களுக்கு அதிக ஊதியம்

தர மறுக்கும் முதலாளிகள்

சுயத்துக்காக தருவதோ கோடிகள்சாலையில் விற்கும் வியாபாரியிடம்

பேரம் பேசும் நாம்

மால்களில்  பேசாமல் வாங்குகிறோம்வீதியில் விற்பதால் தரமற்றதுமல்ல

கடைகளில் விற்பதால் உயர்ந்ததுமல்ல

அங்கே தான் பாதுகாக்க

மருந்துகள் போடப்படும்ஒருவனுக்கு உணவில்லை யெனில்

ஜகத்தினை அழித்தி டுவோம்

இப்போதோ

உணவுதரும் விவசாயிகளுக்கே உணவில்லைமுரண்களை  களைவோம்

அரண்களை அமைப்போம்

ஏழைகளை நேசிப்போம்


தி.பத்மாசினி

கருப்பும் வெளுப்பும்


கருப்பே

கலங்காதே

வெறுக்கிறார்களே அனைவரும் என்று!

தலைமுடியில்

நீதான் இருக்கவேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறார்கள்!

வெளுப்பே

அனைவரும் விரும்புகிறார்கள் என்றெண்ணி கர்வம் அடையாதே!

தலைமுடியில் உன்னைக் கண்டால் வெறுக்கிறார்கள்!உன்மீது கருப்பைத்தான் பூசி மறைக்கிறார்கள்!


த.ஹேமாவதி

கோளூர்

புரிதல் இல்லாமைஉழைக்கத் தெரிந்த மனிதர்களுக்கு

பிழைக்கத் தெரியவில்லை,

பிழைக்கத் தெரிந்த மனிதர்களுக்கு 

உழைக்கும் வழக்கமில்லை.


பாசம் காட்டும் மனிதர்களுக்கு 

வேஷம் புரிவதில்லை,

வேஷம் போடும் மனிதர்களுக்கு

பாசம்  பெரிது இல்லை.


கொடுக்க நினைக்கும் மனிதர் 

பிறரிடம் எடுக்க நினைப்பதில்லை,

எடுக்க நினைக்கும் மனிதர் பலரும் 

கொடுக்க நினைப்பதில்லை.


சொல்லால் அடிக்கும் மனிதர் இடத்தில் 

உறவுகள் சேர்வதில்லை,

உறவை வேண்டும் மனிதர் என்றும் 

சொல்லால் அடிப்பதில்லை.


கல்லாய்க் காணும் மனிதர் கண்ணில் 

கடவுள் தெரிவதில்லை,

கடவுளைக் காணும் மனிதர் கண்ணில் 

கல்லே தெரிவதில்லை.


இதைச் சொன்னாலும் புரிவதில்லை.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

நன்றியுணர்வு

என்னைக் கர்ப்பத்தில்
சுமந்தவளுக்கு
நான் காட்டும்
நன்றியுணர்வு
ஒவ்வொரு
முறையும்
என்னைக் கர்ப்பத்தில்
பாதுகாத்த
அம்மாவிற்கு
கடைசி வரையில்
கருவறையில்
குழந்தையைப்
பாதுகாப்பதைப்
போல
தாயைப்
பாதுகாப்போமே..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


Tuesday, 25 December 2018

அனைவருக்கும் இனிய 'கிறிஸ்து பிறந்ததின நல்வாழ்த்துகள்!உ  உலகமே
      உவகை பொங்க

ல   ந'ல'மெல்லாம்
       நம்மில் தங்க

க    கடவுளாய்
       கருத்தாய் வணங்க

இ   இரக்கத்தின்
       ஊற்றாக

ர     இரக்கத்தைப்
        பொழியும்
        இறைவனாக

ட்     ம'ட்'டற்ற
        மகிழ்ச்சியில்

ச    சகல
       வியாபியாக

க   கன்னலாய்

ன்   அ'ன்'பாய்
        உதித்த
         குழந்தை

இ   இவ்வுலகில்
       இதயம் கவர்ந்த
       இறைமகன்

யே  நீ'யே'
         என மகிழும்
         இந்நாளில்

சு     சுடரொளியாய்
         எழுந்து

கி     கிண்ணாரத்தின்
         இசையும்
         உம்முன் விழுந்து

றி    போ'ற்'றி
         வணங்கும்

த்      மக'த்'துவமிக்க
         நன்னாள்
          பொன்னாள்

து     பூத்'து'க்குலுங்கும்
          மலர்களும்
          புன்னகைக்கும்
          புதுப்பொலிவு
           பெற்ற நாள்

இந்தநாளிலிருந்து
இறைமகன் உதித்த
இனிமை நாளிலிருந்து
இவ்வுலகத்தில்
இன்னல் நீங்க
இவ்வுலகமே இன்புற்றுமகிழ
இயலாமை இல்லாமை ஆக
இதயமெல்லாம் அன்பில் உறவாட
இனிய வாழ்த்துகள்!


இவண்
ம.பிரான்சிஸ்ஆரோக்கியம்,
அ.கிளாரா மேரி,
பி.ஜஸ்டின் ஆன்டோ,
பி.கெவின் ஜோஸ்வா,
பி.பில்பெர்ட்டா கார்மெல்.

மேட்டூர் அணை 1.


அவரவர்க்கு ஒரு வழி

மறுபடியும்
விரதத்தோடு
நீ

மறுபடியும்
திரவத்தோடு
நான்

அடுத்தடுத்த சந்திப்பிலிருக்கின்றன
மதுக்கடைகள்
கோயில்கள்

புறச்சூழலின்
கோரப்பிடியை
உதறிக்கடக்க
அவரவர்க்கு
ஒரு வழி

எவ்வழியாயினுமென்
அமைதியின் மடியில்
உறங்கட்டும்
ஆழ்மனம்

*பொன்.இரவீந்திரன்


பால்
உடல் சோர்வை நீக்கும் ஆ வின் பாலும்
மேதியின் பாலும்

அன்னையில்லா குழந்தைகட்கு
ஆவின் பால்

காந்தி விரும்பி குடித்தது ஆட்டுப்பால்

நோய் எதிர்ப்பு சக்தி தரும்
கழுதைப்பால்

நீரிழிவு நோயை குறைக்கும்
ஒட்டகப்பால்

பெண்சிசுவை கொல்லும் கள்ளிப்பால்

அனைவரையும் அச்சுறுத்தும் எருக்கம் பால்

வாழ்வியல் நெறியை கூறுவது
முப்பால்

ஆண்பாலும்
பெண்பாலும்
முப்பாலை பின்பற்றி
நடந்தால்

அப்பால் நம்மை தள்ளுபவர் யாரும்  இல்லை

தி.பத்மாசினி


Monday, 24 December 2018

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்


எதிர்பார்ப்பு?

மருத்துவமனை வாசலெதிரிலுள்ள
பூக்கடையில்
தொங்குகின்றன

மரணத்தை
எதிர்பார்க்கும்
மாலைகள்

*பொன்.இரவீந்திரன்*


மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!


💐💐💐💐💐💐💐💐
மாசிலா மரியாளின்
மகோன்னத மகனாக
மாட்டுத் தொழுவத்தில்
பனித்த இரவினில்
பேரொளிச் சுடராக
இருள் அஞ்சியோட
பிறந்தாரே
கர்த்தர்
பிறந்தாரே
மகிழ்ந்துக் கொண்டாடுவோம்
நாம் கூடியே
துதி பாடியே
மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!
மானுடர் வாழ்ந்திட
புதுபாதை தந்திட
நன்மைகள் பெருகிட
எழில்மழலையாய்ப்
பிறந்தார்!
மனிதரை இரட்சிக்கும்      நல்ல மேய்ப்பராய்த்
திகழ்ந்தார்!
சொல்லொணா வேதனை யாவையும் ஏற்று
புன்னகை பூத்தமுகமுடன்
அன்பால் மாந்தரை
அணைத்தார்!
நமக்காய் சிலுவையில் மாய்ந்திடவே
பெருமகனார்இயேசு
பிறந்தாரே!
மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!
நாம்
மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!

த.ஹேமாவதி
கோளூர்


கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்மார்கழி மாத குளிரினிலே!

வெண்பனி தூவும் இரவினிலே!

கன்னி மரியின் வயிற்றினிலே

பாலன் இயேசு பிறந்தாரே!இருளை நீக்கும் வெளிச்சம் போல

மக்கள் பாவம் போக்க பிறந்தாரே!

சிலரின் பாவம் சுமக்க வந்தாரே!

பலரின் நோயைத் தீர்க்கவும் எழுந்தாரே!அன்னை மரியின் செல்ல பிள்ளை

பால்  போல் சிரிக்கும் முல்லை

மனதில் எந்த கபடமும் இல்லை

அவரே மனித மகிழ்ச்சியின் எல்லைநட்சத்திரமும் சிரித்து மகிழ்ந்து

அவரைக் காண விரும்பி

ஞானிகளுக்கு பாதை காட்டும்

பேரில் பார்க்க வந்ததுவேஎண்ணங்களையும் சிந்தைகளையும் சீர்படுத்தவே

மக்கள் யாவும் ஒன்றுபட்டு

அன்புடன் கூடி வாழ

இயேசு பிரான் பிறந்தாரேஇந்த நாளின் மகிழ்ச்சி போல

எந்த நாளும் அனைவர் வாழ்வும்

சீரும் சிறப்பும் பெற்று திகழ

இயேசு பிறந்த நாளில் 

வேண்டி விரும்பி வாழ்த்துகிறேன்தி.பத்மாசினி

இத்தோட நிறுத்திக்கிறேன் இப்போ நான் வாத்தியாரு

உச்சி வெய்ய 

 உடல் கருக்க 

 வேர்வை வழி 

 இரத்தம் சிந்தி  

 மெச்சி என்னை  

 பள்ளிக்கு அனுப்பி  

 வச்சதெல்லாம்  

 நெஞ்சுக்குள்ள 

 ரண ரணமா 

 கணத்து கிடக்கு   


 வயக்காட்டு வேலை   

 தீந்துபோன நேரத்துல  

 பணக்காரன்  

 வாசக்கூட்டி நீ அள்ளுன  

 குப்பை மனசுக்குள்ள  

 கொட்டிக்கிடக்கு 


 உன் காலுல  

 செருப்பில்லாம    

 காடு காடா நீ அலஞ்சு  

 என் காலுக்கு செருப்பு  

 தந்த காலமெல்லாம்  

 நெருப்பாட்டம் எரியுது  

 இன்னும் என்  

 நெனப்புக்குள்ள 


 உன் கிழிஞ்ச சேலைய  

 கட்டிக்கிட்டு என்  

 சீருடைய பிழிஞ்சு  

 போட்ட நிகழ்வெல்லாம்  

 நிழற்படமா நிக்குது  

 என் கண்ணுக்குள்ள


 என் சோடிங்க எல்லா  

 விளையாட  

 விடுமுறையில  

 என்னை வேலைக்கு  

 கூட்டிப்போயி எனக்கு  

 உன் முந்தானைல  

 முக்காடு போட்டு 

 என் நிரைக்கும் சேர்த்து   

 முழுசா நீ  

 களையெடுத்தயே


 படிக்க வச்சு என்னாத்த  

 பண்ணப்போற  

 படிச்சுப்புட்டு பாரு நம்ம  

 செல்லாத்தா  

 மகனாட்டம்   

 கொள்ளப்பேரு  

 சுத்துறான்   

 ஏற்கெனவே சும்மா 


 சொன்னவங்க  

 கிட்டயெல்லாம்  

 சொன்னயே 

 என்புள்ள கலெக்டர்  

 ஆவான்னு  அம்மா  


 நீ பட்ட எல்லாத்தையும்  

 நான் பாட்டுல எழுதினா  

 நாளும் போதாது  

 எழுதுகோலும்  

 போதாது 


  உன் ஆசை தீர்க்காத  

 பதறாதான்  

 போயிட்டேன் 

 பதறாத என் ஆத்தா


 இத்தோட  

 நிறுத்திக்கிறேன்  

 இப்போ நான்  

 வாத்தியாரு 


 என்கிட்ட படிக்கிறவன்   

 ஆகட்டும் 

 எதிர்கால கலெக்டரு..

Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS