முள்மீது நடந்தாலும் முள்படாமல் நடக்கின்றாய்,
நடக்கவேண்டிய விதமதனை நயமுடனே சொல்கின்றாய்.
செல்கின்ற பாதையெங்கும் முத்திரையைப் பதிக்கின்றாய்
சிறப்பான வழிகாட்டியாய் நீயும் உயர்கின்றாய்.
சுமை என்று சொல்லாமல் காலமெல்லாம் சுமக்கின்றாய்
குடும்பத்தின் தலைவனுக்கு இலக்கணமாய் தெரிகின்றாய்
உன்னுடைய பாதுகாப்பை நீயே தான் பார்க்கின்றாய்
நம்பாதே எவரையும் என்றுணர்த்தி நிற்கின்றாய்.
மெதுவாகச் சென்றாலும் மேதமையைக் காட்டுகின்றாய்,
குறிக்கோள் தான் முக்கியம் பாதையல்ல என்கின்றாய்.
தெரியாத நபர் கண்டால் முகத்தை நீ மறைக்கின்றாய்
ஆள் பார்த்து பழகவேண்டும் என்று காட்டி நிற்கின்றாய்.
எப்படித்தான் வாழவேண்டும் சொல்லாமல் சொல்கின்றாய்
சொத்தையாக இல்லாமல் நத்தையாகு என்கின்றாய்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*