Header Ads Widget

Responsive Advertisement

இத்தோட நிறுத்திக்கிறேன் இப்போ நான் வாத்தியாரு

உச்சி வெய்ய 

 உடல் கருக்க 

 வேர்வை வழி 

 இரத்தம் சிந்தி  

 மெச்சி என்னை  

 பள்ளிக்கு அனுப்பி  

 வச்சதெல்லாம்  

 நெஞ்சுக்குள்ள 

 ரண ரணமா 

 கணத்து கிடக்கு   


 வயக்காட்டு வேலை   

 தீந்துபோன நேரத்துல  

 பணக்காரன்  

 வாசக்கூட்டி நீ அள்ளுன  

 குப்பை மனசுக்குள்ள  

 கொட்டிக்கிடக்கு 


 உன் காலுல  

 செருப்பில்லாம    

 காடு காடா நீ அலஞ்சு  

 என் காலுக்கு செருப்பு  

 தந்த காலமெல்லாம்  

 நெருப்பாட்டம் எரியுது  

 இன்னும் என்  

 நெனப்புக்குள்ள 


 உன் கிழிஞ்ச சேலைய  

 கட்டிக்கிட்டு என்  

 சீருடைய பிழிஞ்சு  

 போட்ட நிகழ்வெல்லாம்  

 நிழற்படமா நிக்குது  

 என் கண்ணுக்குள்ள


 என் சோடிங்க எல்லா  

 விளையாட  

 விடுமுறையில  

 என்னை வேலைக்கு  

 கூட்டிப்போயி எனக்கு  

 உன் முந்தானைல  

 முக்காடு போட்டு 

 என் நிரைக்கும் சேர்த்து   

 முழுசா நீ  

 களையெடுத்தயே


 படிக்க வச்சு என்னாத்த  

 பண்ணப்போற  

 படிச்சுப்புட்டு பாரு நம்ம  

 செல்லாத்தா  

 மகனாட்டம்   

 கொள்ளப்பேரு  

 சுத்துறான்   

 ஏற்கெனவே சும்மா 


 சொன்னவங்க  

 கிட்டயெல்லாம்  

 சொன்னயே 

 என்புள்ள கலெக்டர்  

 ஆவான்னு  அம்மா  


 நீ பட்ட எல்லாத்தையும்  

 நான் பாட்டுல எழுதினா  

 நாளும் போதாது  

 எழுதுகோலும்  

 போதாது 


  உன் ஆசை தீர்க்காத  

 பதறாதான்  

 போயிட்டேன் 

 பதறாத என் ஆத்தா


 இத்தோட  

 நிறுத்திக்கிறேன்  

 இப்போ நான்  

 வாத்தியாரு 


 என்கிட்ட படிக்கிறவன்   

 ஆகட்டும் 

 எதிர்கால கலெக்டரு..