Header Ads Widget

Responsive Advertisement

மலரட்டும் மனித நேயம்



மலராக வேண்டுமெனில்
மொட்டொன்று  வரவேண்டும்,
மொட்டுவர வேண்டுமெனில்
செடிகள் தழைக்கவேண்டும்,
செடிகள் வளரவேண்டுமெனில்
மண்வேண்டும், வளம் வேண்டும்,
அடிப்படையில் இருந்து தானே
ஆரம்பம் வரவேண்டும்.

தாய்வடிக்கும் கண்ணீரோ
சேய்கண்ணில் தெரிவதில்லை,
தாய் மடிந்து எலும்பாகித்
தனயனிடம் கேட்கிறது,
தாய்ப்பாசமே தொலைந்த பின்பு
இங்கு ஏது மனித நேயம்?

உறவொன்று உணவின்றி
உயிர்விட்டுப் போன பின்னும்,
நட்பொன்று நலிவுற்றுக்
கடன் வாழ்வில் உழன்ற பின்னும்,
கண்டுகொள்ள மனமின்றிக்
களிப்பு நாடும் மனிதனிடம்
காலம் கூட கேட்கிறது
இங்கு ஏது மனித நேயம்?

அடிபட்டு துடிதுடித்து அடங்கப்போகும் உயிரிடத்தில்,
பிடுங்கிக் கொண்டு ஓடுகின்ற கடைநிலையைக் காண்கையிலே, கதிரவன் கூடக் கவலையுடன் களமிறங்கிக் கேட்கிறது
எங்கே மறைந்தது மனித நேயம்?

பணத்துக்குக் கொடுக்கின்ற மதிப்பிலே ஒருபாதி,
மனத்துக்குக் கொடுக்கின்ற மனமிருந்தால் போதும்,
கனக்கின்ற இதயங்கள் கனிவுடனே சொல்லும்
மலரட்டும் மனித நேயம்.

தனக்கென்று இல்லாமல் பிறர்க்காக வேண்டாம்,
தனக்குடையதை வைத்துவிட்டுப் பிறர்க்கு மீதியை அளித்தால்,
தயக்கமே இல்லாமல் இயற்கை கூடச் சொல்லும்
மலரட்டும் மனித நேயம்.

பெற்றோரை தெய்வமாக வணங்கவும் வேண்டாம்,
உற்றாரை சரிபாதி யாகக் காணவேண்டாம்,
மற்றோரை மனிதனாக நினைத்தாலே போதும்,
கற்றோர் சொல் வார்த்தை கேட்டு நடந்தாலே போதும்,
மனம் குளிர முகம் மகிழ மனிதகுலம் சொல்லும்
மலரட்டும் மனித நேயம்,
மலரட்டும் மனித நேயம்.

*சுலீ அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி.