Now Online

Friday, 18 September 2020

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே
கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே.

தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவில்
வந்து நின்று பார்க்கிறது உள்ளிருந்து என்னில்.

நேரலை வகுப்புக்கு இடைவேளையா இப்போது
அது தானே நடக்கிறது தேசமெல்லாம் தற்போது.

முடியாது என்று சொல்லிச் செல்லவில்லை பின்னே
முயற்சி செய்து பார்ப்பதற்காய் வந்து நின்றாய் முன்னே.

அடியெடுத்து வைத்து விட்டாய் அசராமல் முன் செல்வாய்
பொடிப் பொடியாய் முன்னேறிக் குறிக்கோளை அடைந்திடுவாய்.

மலை தூக்கும் மாதவனைக் கண் முன்னே கண்டேன்
கல் தூக்கும் குழந்தையாம் உன்னில் நான் கண்டேன்.

முடியுமா முடியாதா என்பதல்ல கேள்வி
முயன்றால் முடியாதது இல்லை இது நீதி.

வீரம் விளைந்த தேசத்தின் விழுதடா நீ கண்ணே
வேர்கள் பழுது பட்டாலும் தாங்கி நிற்பாய் விழுதாய்.

உன் வீட்டையும் தாய் நாட்டையும்
தாங்கி நிற்பாய் விழுதாய்.

*கிராத்தூரான்*


எந்தன் பிரபஞ்சம்...! *பொன்.இரவீந்திரன்*

இருள் அப்பிக்கிடக்கிறதுவாழ்க்கை...!பேரன்பு
பேரழகு
ஆயிரம் கள்ளச்சிகளின்
ஒற்றை வடிவம்
எந்தன் செல்லம்மா.. !
நீ வந்து விளக்கேற்றுகையில்
வெளிச்சமாகும்
எந்தன் பிரபஞ்சம்...!

*பொன்.இரவீந்திரன்*


Wednesday, 16 September 2020

கவிஞன்கவிஞனென்றால்
காதலையும்
கருத்துக்களையும்
சொல்லிக்கொண்டு
சிறு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருப்பவனல்ல...!!

அன்பையும்
அரவணைப்பையும்..!!

நட்பையும்
தோழமையும்..!!

காதலையும்
கண்ணியத்தையும்..!!

ஆசைகளையும்
வலிகளையும்..!!

ஏமாற்றங்களையும்
துரோகங்களையும்..!!

இயற்கையையும்
மௌனத்தையும்..!!

துளிர்க்கும்
துளிர்களையும்
பூக்கும் பூக்களையும்..!!

பறக்கும்
பறவைகளையும்
வானத்து
நட்சத்திரங்களையும்..

உயர்வையும்
தாழ்வையும்..!!

சமூகத்திற்கான
சிந்தனைகளையும்..!!

கோபத்தையும்
வெடித்து சிதறும்
எரிமலைகளையும் கூட..!!

இப்படி...
பிரபஞ்சத்திலுள்ள
அனைத்தையும்
கற்பனையில்
எழுத்துக்களாய்
கொண்டு வருபவன் தான்
சிறந்த கவிஞன்....!!!


✍️கவிரசிகை....
            .....சுகந்தீனா


Friday, 11 September 2020

பாரதி யுகங்களை வென்றவன்
எட்டய புரத்தை வெளிச்சம் போட்டு
எட்டுத் திக்கிலும் காட்டப் பிறந்தவன்!
முட்டும் மலையென உயர்ந்த எண்ணம்
மனதில் கொண்டு சாதிகள் துறந்தவன்!
கொட்டும் முரசென பாடியே மக்களின்
கண்கள் திறந்திட தன்னை மறந்தவன்!
இட்டமாய் விடுதலை வேண்டி பாதியில்
இந்த உலகை விட்டுப் பறந்தவன்!


நிறைய மொழிகள் அறிந்தவன் ஆயினும்
நிரம்ப இனிமை தமிழே என்றவன்!
குறையா இன்பம் பாக்களில் தந்தே
கவிதை உருவில் யுகங்களை வென்றவன்!
மறைதனை ஓதும் அந்தணன் எனினும்
மனிதர் யாவரும் ஓர்குலம் என்றவன்!
கறையெனப் படிந்த சமூகக் கொடுமை
கதறியே ஓட எதிர்த்து நின்றவன்!

தெள்ளத் தெளிவாய் விடுதலை வேட்கை
தெருக்கள் தோறும் பொங்கிடச் செய்தவன்
வெள்ளைக் கும்பலின் அடிமைத் தளையை
வெட்டிட எழுத்தை வாளெனப் பிடித்தவன்!
உள்ளம் உயர்ந்திட வழிதனை வகுத்து
இளைய தலைமுறை ஓங்கிட வைத்தவன்!
வெள்ளம் பே பெருகிய கவியால்
உள்ளம் யாவும் கொள்ளைக் கொண்டவன்!

த. ஹேமாவதி

பாரதி பார்முறுக்கு மீசையோடு முன்னாலே நிற்கிறானே
அன்னாளில் அன்னியரை அடி நடுங்க வைத்தவன்
திண்டாட்டமே வாழ்க்கையாகக் கொண்ட போதும் தயங்காது
அண்டங் காக்கைக்கும் உணவளித்து மகிழ்ந்தவன்.

பார் பாரதி பார்

பெண்ணுரிமை தன்னுரிமை பேணியே நின்றவன்
உன்னுரிமை உணர் என்று உயிர்ப்போடு சொன்னவன்
கண்ணிரண்டில் கோபத்தைக் கனலாகக் கொண்டவன்
கண்ணை மூடி இருட்டென்று சொன்னவர் கண் திறந்தவன்.

பார் பாரதி பார்

கருப்புக் கோட்டுக்குள் வறுமையை மறைத்தவன்
கரிய மனம் படைத்தவர் செயல்களை வெறுத்தவன்
எவருக்கும் அஞ்சாது அநீதியை எதிர்த்தவன்
அச்சமில்லை அச்சமில்லை என்றுரக்கச் சொன்னவன்.

பார் பாரதி பார்

உறுதி கொண்ட நெஞ்சோடு வா என்று அழைத்தவன்
வலிமையற்ற தோளென்றால் போ என்று சினந்தவன்
காலனையும் தன் காலால் உதைப்பதற்குத் துணிந்தவன்
இறந்த பின்னும் தன் இருப்பை நிலை நிறுத்திக் கொண்டவன்.

பார்
பார் அந்த பாரதியைப் பெருமையோடு பார்
யார் அந்த பாரதி என்றுணர்ந்து பார்
இவனன்றோ கவிஞனென்று தலை நிமிர்ந்து பார்
இவன் போலே யார் என்று இறுமாப்போடு பார்.

*கிராத்தூரான்*

குப்பைகுப்பையில்லா நகரமென்ற சான்றிதழ் பெற்றுவிட்டால்
குப்பையள்ள வேண்டாம் இனி என்பது தான் நியதியா
குப்பைத் தொட்டி வைக்காமல் எடுத்துச் சென்று விட்டுவிட்டால்
குப்பையில்லா நகரமென்ற அர்த்தமும் தான் ஆகுமா?

தூய்மை நகரமென்று வாய்கிழியச் சொல்கிறார்கள்
தூய்மையென்றால் என்னவென்று தெரியாத அறிவிலிகள்
எங்கெங்கு திரும்பினாலும் எட்டு திக்கும் குப்பையடா
இதைத் தட்டிக்கேட்கும் துணிவு இங்கு எவருக்கும் இல்லையடா.

மலை போலக் குவித்து வைத்து எரித்து விட்டுச் செல்கிறார்
எரிக்கக் கூடாததை எரியவிட்டு நகர்கிறார்
சுகாதார சீர்கேட்டை ஊழியரே செய்கிறார்
சகிக்க முடியாப் புகைமூட்டம் தனில் மக்கள் திணறுகிறார்.

எடுத்து வைத்த குப்பை கூட எடுக்க ஆட்கள் வருவதில்லை
காலியிடம் பார்த்து குப்பை கொட்டுவதோ நிற்பதில்லை
திருந்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட எவர்க்குமில்லை
கற்றவர்கள் அதிகமிதைச் செய்வதுதான் பொறுக்கவில்லை.

கொரோனாக் காலம் என்று தப்பிக்க முயல்பவர்கள்
ஒன்றை மட்டும் நிச்சயமாய் மனதுக்குள் நிறுத்த வேண்டும்
ஒரு பணி மட்டும் தான் செய்வோம் என்று கொள்கையென்றால்
இவர்களெல்லாம் எதற்காக என்று மக்கள் கேள்வி கேட்பார்

பதில் சொல்ல முடியாமல் நிற்பவரைத் தூற்றி நிற்பார்.

*கிராத்தூரான்*


குரூரமாய்க் காத்திருக்கிறது

குரூரமாய்க்
காத்திருக்கிறது
காலம்
சிகண்டியைப்போல...!
தலைகுனியத்தான்
வேண்டும்
பீஷ்மர்களெல்லாம்...!
காணுமிடமெல்லாம்
குருஷேத்திரம்...!
கண்ணுக்கெட்டியவரை
காணமுடியவில்லை
கர்ணன்களை...
விதுரன்களை...!!

*பொன்.இரவீந்திரன்*


காலத்தின் கைகள்

காலத்தின் கைகள்
உன்னையும்
என்னையும்
துளைத்தெடுக்கிறது
சுட்டெரிக்கிறது
செல்லம்மா...!
எதுவாயினுமென்..
காலமறியாதடி
துளைத்தால்
புல்லாங்குழல்...
சுட்டெரித்தால்
பொன்...!

*பொன்.இரவீந்திரன்*


உண்மை அன்பில் லேசான இதயம்ஏமாற்றத்தால்
ஏங்கித்
தவிக்கிறேன்...!!

கண்ணீர்
வடிக்கிறேன்...!!

கவலை
கொள்கிறேன்...!!

இதயம்
இரும்பென
கனக்கிறதே...!!

என்று கலங்கும்
இதயங்களே...!!

இனியாவது
மாற்றிக்
கொள்ளுங்கள்
உங்கள்
சிந்தனைகளை...!!

முதலில்
ஏமாற்றம்
தந்தவர்
யார்....!!

நீங்களும்
அன்புகொண்ட
ஒருவர் தானே...!!

ஏனெனில்...
அன்பினால்
ஏமாற்றப்பட்ட
இதயங்களே
உலகில் அதிகம்...!!

ஏமாற்றிவிட்டார்
எனும் நீங்கள்
அவர்கள்மேல்
வைத்த அன்பு
நிஜமென்றால்
அவருக்காய்
விட்டுக்
கொடுங்கள்...!!

அன்பானவர்களின் ஏமாற்றமென்பது...

அவர்களின்
சூழ்நிலையாகக்
கூட இருக்கலாம்
என்று
விட்டுக்கொடுத்து
உங்களின்
உண்மையான
அன்பினால்
ஏமாற்றமின்றி
தொடருங்கள்...!!

ஏமாற்றம்
என்பதே ஏதோ
ஒருவித
எதிர்பார்ப்பில்
வருவது தானே...!!

உங்கள்
எதிர்பார்ப்பை
குறைத்து
உங்களின்
அன்பானவர்களுக்காய்
நீங்கள்
உண்மையாய்
வாழ்ந்து
பாருங்கள்...!!

அப்போது
உணர்வீர்கள்...

இதயம்
இறகை விட
லேசாவதை...!!


✍️கவிரசிகை.....
           ......சுகந்தீனா


எனக்கும் கிடைக்குமா கல்விஒருவேளை உணவாவது கிடைக்குமே என்றே
பள்ளிக்கு அனுப்பினர் பெற்றோர்கள் அன்றே
கட்டணம் கட்டக் காசில்லை என்பதால்
அரசுப் பள்ளியில் படித்தோம் நன்றே.

நாங்களும் படிக்கிறோம் நம்பிக்கை வந்தது
எதிர்காலக் கனவுகள் எதிரிலே தெரிந்தது
அனைத்துமே நிறைவேறாக் கனவாகிப் போகுமா?
நேரலை வகுப்புகள் நிரந்தரமாய் ஆகுமா?

அன்றாட உணவிற்கே திண்டாடி நிற்கையில்
வசதியுள்ள பிள்ளைபோல் அலைபேசி கிடைக்குமா
அடிப்படைக் கல்வியும் இல்லாமல் போகுமா
எம்குறை உரியவர் செவிகளை எட்டுமா?

*கிராத்தூரான்*


Thursday, 10 September 2020

எழுதுகோல்

🖊️

எழுத்தாணிக்கு விடைக்கொடுத்தாய்...

கத்தி முனையை காட்டிலும் வலிமையானாய்...

  எண்ணங்களின் எழுச்சிக்கு வெளிச்சம் காட்டினாய்...

புரட்சியின் மலர்ச்சிக்கு வித்திட்டாய்...

  வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு பதிவிட்டாய்...

உள்ளத்தின் உணர்வுகளுக்கு உயிர் ஊட்டினாய்...

  நட்பின் பிணைப்பிற்க்கு அன்பு பரிசானாய்...🖊️

  உறவுகளை நினைவூட்டும் அன்பு சின்னமானாய்...

  கால மாற்றத்தில் புதிய கண்டுப்பிடிப்பின் *மிச்சமல்ல நீ,*

  எக்காலத்திலும் தவிர்க்கயியலா... *உச்சம் நீ !*
*_செப்டம்பர் 10_*
_உலக எழுதுகோல் தின_ _நல்வாழ்த்துகள்_ 🙏🏻🙂
நட்புடன்,
சொ.சத்தியன்🖊️


காகிதம் தேடும் பேனா

காகிதமும் பேனாவும்
ஒருநாள் இப்படியாகத்தானே
கதைத்துக்கொண்டிருந்தன!
உன்னை பளீரென காட்டும்
நானே பெருமையானவன்
என்றது காகிதம்....!
நான் உன்னில் இல்லையெனில்
உன் புகலிடம் குப்பைத்தொட்டியே!
பெருமையின் உச்சத்தில் பேனா!
பொறுமையுடன் நான் சொன்னேன்.....
நீவீர் இருவரும் இணைந்திருந்தால்
மட்டுமே என் கவிதைக்கு பெருமை!
ஏனெனில்......
வெறுமையில் ஆயிரம்
பேரை நேசிக்கின்றேன்!
வெறும் மை இல்லாமல்
வெற்றுத்தாளை மட்டும்
நேசிக்கும் பேனாவைப் போல!
என் அன்பை யாருக்கும்
புரியவைக்க முடியாததால் ....
முன்னுரை எழுதும் முன்பே
முடிவுரையை மட்டுமே
எழுதிவைத்துவிட்டு போகிறேன்!
அதிலும்
ஐந்தடி உயரபேனா கொண்டு
சிவப்பு மையினால் .....!
என்னை எனக்காக மட்டுமே
நேசிக்கும் வெள்ளை( மனங்களில்)
காகிதங்களில்........!
என் கவிப்பேனா
காகிதங்களை முத்தமிட்டதால்
பிறந்த கவிக்குழந்தை இது!
இதற்கு காதல் எனும் பெயரிட்டு
உங்கள் கரங்களில் தவழ
உள்ளார்ந்த அன்புடன் தருகிறேன்!
தயவு செய்து அதற்கு
காமப்பால் புகட்டி கசக்கி
எறிந்துவிடாதீர்கள்! பின்பு......
மை நிரம்பிய என் பேனா
தீ நிரப்பி வந்து உம்மை
காமசம்ஹாரம் செய்துவிட
வாய்ப்பளித்து விடாதீர்கள்!
🌹🌹வத்சலா 🌹🌹


போய்விடேன் இப்பூமியைவிட்டு

தொற்று பரவாமல் இருக்க
கிருமி நாசினிக் கொண்டே கைகளை அடிக்கடி கழுவ வேண்டுமாம். குளிக்கவே வழலைக் கட்டிக்கு வக்கத்த நான்...?
வெளியில் சென்றால் முககக்கவசம் அணிய
வேண்டுமாம். கிழிந்த அரைப்
பாவாடைக்கு  ஒட்டுத்துணி தேடிச் செல்கையில் தையற்
கடைகாரர் வெட்டி வீசும் துண்டுத் துணியில் இனி இன்னும் சில சேர்த்துப் பொறுக்க வேண்டும். மிளகு,, இஞ்சி, பூண்டெல்லாம் உணவில் சேர்த்துக்
கனுமாம். அம்மாவிடம் சொல்லி பழங்கஞ்சிக்கு இவைக் கொண்டு தொட்டுக்க ஏதும் செய்ய
முடியுமான்னு  கேகக்கனும். மந்திரிக்கிற பாட்டிக்கிட்டச் சொல்லி தாயத்து ஒன்று கட்டி  ஓட்டிவிடனும் இந்த தொற்றை என்றாள் ஏழை மகளொருத்தி வெள்ளந்தியாய். கட்டுக்கள் வராத தொற்றே கள்ளமில்லா இது போன்ற குழந்தையை முன்னிட்டாவது காணாமல் போய்விடேன் இப்பூமியைவிட்டு.


பலமுனைப் போட்டிஎன்னைப் போல்
பேசும்திறமை எம்முனைக்குண்டு?
கர்ச்சித்தது *நாமுனை*
ஏன் எல்லா மொழிகளும் என்னுள் அடக்கம்
நீ பேச மொழி தேவை
மொழியே இல்லாமல்
நான்ஆயிரம் பேசுவேன் உன்னால் முடியுமோ என்றது *பெண்ணின் விழிமுனை.*
தலைகுனிந்தது நாமுனை!

நான்இல்லாமல்
மாவீரன் ஏது என்று
இறுமாப்புடன் மார்தட்டியது *வாள்முனை*
வாளேந்தும் வீரனையும் என்முனையால்
வென்றிடுவேன்!
என்றது *பெண்ணின் விழிமுனை*
தலைகுனிந்தது வாள்முனை!

நானின்றி இலக்கியமேது கொக்கரித்தது *பேனாமுனை*
நீ எழுத மை வேண்டும் தாள் வேண்டும் ஆனால்
தாளின்றி மையின்றி
நொடியினில் ஆயிரம் கவிதைகள் நான் வடிப்பேன் உன்னால்
முடியுமோ?என்றது பெண்ணின் விழிமுனை.
வெட்கியது பேனாமுனை!

தைப்பதில் என்துணை இல்லையேல் உங்களுக்கு ஆடையேது?என ஆங்காரத்துடன் கூவியது *ஊசிமுனை*
உன்னால் துணிகளைத்தான்
தைக்கமுடியும்
என்னைப்போல இதயங்களைத் தைக்கமுடியுமா?தைத்து இருவரிடையே காதலை உருவாக்கமுடியுமா?
என்றது பெண்ணின் விழிமுனை! நாணியது ஊசிமுனை!

மலைகளையே புரட்டிப்போடும் வல்லமை என்னைப்போல் யாருக்குண்டு?என்று
கர்வத்துடன் குரலெழுப்பிய *கடப்பாரையின் முனையைப்* பார்த்து மலையை மட்டும்தான் புரட்டமுடியும் உன்னால்! ஆனால் நான் நினைத்தால் தேசங்களையே புரட்டிப் போடுவேன்!என்றது பெண்ணின் விழிமுனை.
வாய்பொத்திக் கொண்டது கடப்பாரையின் முனை!
என்னே வலிமை!
*பெண்ணின் விழிமுனை!*

*த.ஹேமாவதி*
*கோளூர்*


கண்களில்... தூசு பட்டால்

கண்களில்...

தூசு பட்டால்
வரும்
கண்ணீரை
விட...

மனதில்
மாசுபட்டால்
வரும்
கண்ணீரே
அதிகம்...!!

கண்ணீரை
தந்தவர்கள்
காணாமல்
போயிருந்தால்
கூட
பரவாயில்லை...!!

கண்ணெதிரிலேயே
இருந்து
காலத்துக்கும்
கஷ்டப்படுத்தி
கொண்டிருப்பதே
தினம் மனம்
படும் துயரம்...!!

கண்களில்
விழுந்த
தூசியை
துடைக்க
கைகளும்...!!

மனதில்
விழுந்த
மாசுகளை
துடைக்க
கண்களும்...!!

நித்தம்
நித்தம்
போராடி...!!

மொத்த
வாழ்க்கையும்
கலங்கடித்து
விடுகிறது...!!!

இப்படி
ஒன்றுமில்லாமல்
போன
வாழ்க்கையில்...!!

கடைசியில்
கடினத்தின்
கண்ணீர்
துளிகள்
காணாமல்
போவதென்னவோ...!!

மரணமெனும்
வாசலில்
தான்...!!


✍️கவிரசிகை.....
         .....சுகந்தீனா


Saturday, 5 September 2020

யார் ஆசிரியன்?தங்குற்றம் களைவதோடு பிறரின் குற்றம்
.......தகர்த்தெறிந்து தந்திடுவார் தெளிவை யார்க்கும்!

மங்காத செல்வமான கல்வி தன்னை
......மனமுவந்து மாணவர்க்குத் தருவார் நன்று!

செங்கதிராய் அறியாமை இருளை மாய்ப்பார்!
...... செம்மையாக மாணவரை நடத்திச் செல்வார்!

கங்குகரைக் காணாத கடலாய் என்றும்
......கற்றலைத்தான் தொடர்ந்திடுவார் விரும்பி நாளும்!
(1)

கொழுகொம்பாய்த் தாங்கிடுவார் சீடர் தம்மை!
......கல்விக்கும் மாணவர்க்கும் பற்றுக் கோடாய்!

அழியாத செல்வத்தைப் பேத மின்றி
......அனைவருக்கும் அன்னையாக வழங்கு வாரே!

எழுபிறப்பும் தொடர்கின்ற  கல்விச் செல்வம்
.......எவருக்கும் தருபவர்யார் இவரே யன்றோ?

விழுச்செல்வம் கல்விதனைப் பயிற்று வித்து
.......விழிதந்து வழிகாட்டும் தெய்வ மாவார்!
(2)

த.ஹேமாவதி
கோளூர்


Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS