Header Ads Widget

Responsive Advertisement

பாரதி பார்



முறுக்கு மீசையோடு முன்னாலே நிற்கிறானே
அன்னாளில் அன்னியரை அடி நடுங்க வைத்தவன்
திண்டாட்டமே வாழ்க்கையாகக் கொண்ட போதும் தயங்காது
அண்டங் காக்கைக்கும் உணவளித்து மகிழ்ந்தவன்.

பார் பாரதி பார்

பெண்ணுரிமை தன்னுரிமை பேணியே நின்றவன்
உன்னுரிமை உணர் என்று உயிர்ப்போடு சொன்னவன்
கண்ணிரண்டில் கோபத்தைக் கனலாகக் கொண்டவன்
கண்ணை மூடி இருட்டென்று சொன்னவர் கண் திறந்தவன்.

பார் பாரதி பார்

கருப்புக் கோட்டுக்குள் வறுமையை மறைத்தவன்
கரிய மனம் படைத்தவர் செயல்களை வெறுத்தவன்
எவருக்கும் அஞ்சாது அநீதியை எதிர்த்தவன்
அச்சமில்லை அச்சமில்லை என்றுரக்கச் சொன்னவன்.

பார் பாரதி பார்

உறுதி கொண்ட நெஞ்சோடு வா என்று அழைத்தவன்
வலிமையற்ற தோளென்றால் போ என்று சினந்தவன்
காலனையும் தன் காலால் உதைப்பதற்குத் துணிந்தவன்
இறந்த பின்னும் தன் இருப்பை நிலை நிறுத்திக் கொண்டவன்.

பார்
பார் அந்த பாரதியைப் பெருமையோடு பார்
யார் அந்த பாரதி என்றுணர்ந்து பார்
இவனன்றோ கவிஞனென்று தலை நிமிர்ந்து பார்
இவன் போலே யார் என்று இறுமாப்போடு பார்.

*கிராத்தூரான்*