Header Ads Widget

Responsive Advertisement

புதிதாக எதுவும் எழுதவில்லை



வள்ளுவன் சொன்ன வான்மறை துவங்கி
கம்பன் படைத்த காவியம் எடுத்து
இளங்கோ அளித்த காப்பியம் இரசித்து
பாரதி காட்டிய வழியினில் தொடர்ந்து
கண்ணதாசனைக் கருத்தினில் நினைத்து
வைரமுத்துவின் வரிகளில் நனைந்து
வரைந்தேன் நானும் கவிதைகள் சிலதை.

மாமலை காட்டிய திண்மையைப் புரிந்து
வான்மழை வழங்கிய குளிர்ச்சியில் மகிழ்ந்து
கடலலை தழுவிய சுகத்தினில் நனைந்து
காரிகை அவளது நினைவிலே தவழ்ந்து
மழலையின் மொழியினில் என்னையே மறந்து
உறவுகள் அன்பினில் இறைவனை நினைந்து
எழுதினேன் சில பல வரிகளை நானும்.

இயற்கை சொல்லிய பாடத்தைச் சொன்னேன்
செயற்கை அளித்த அறிவைப் பகிர்ந்தேன்
காலம் வரைந்த கோட்டினை வரைந்தேன்
நட்புகள் அளித்த உதவியை வியந்தேன்
சமூகத்தில் நான் கண்ட அவலத்தைச் சினந்தேன்
குறைகளைப் பழித்தேன் நிறைகளைப் புகழ்ந்தேன்
வேறென்ன செய்தேன் நினைவினில் இல்லை.

புதிதாக எதுவும் நான் எழுதவும் இல்லை
பெரிதாக எழுதத் தெரியவும் இல்லை
பரிகாசம் செய்வோரில் கோபவும் இல்லை
படிக்காமல் தவிர்த்தாலும் கவலையும் இல்லை
சிறிதாகப் புகழ்ந்தாலும் மகிழாமலில்லை
இதைச் சொல்வதில் எனக்கெந்தத் தயக்கமும் இல்லை.

ஏனெனில்....
புதிதாக எதுவும் நான் எழுதிவிடவில்லை.

*சுலீ. அனில் குமார்*