Header Ads Widget

Responsive Advertisement

குப்பை



குப்பையில்லா நகரமென்ற சான்றிதழ் பெற்றுவிட்டால்
குப்பையள்ள வேண்டாம் இனி என்பது தான் நியதியா
குப்பைத் தொட்டி வைக்காமல் எடுத்துச் சென்று விட்டுவிட்டால்
குப்பையில்லா நகரமென்ற அர்த்தமும் தான் ஆகுமா?

தூய்மை நகரமென்று வாய்கிழியச் சொல்கிறார்கள்
தூய்மையென்றால் என்னவென்று தெரியாத அறிவிலிகள்
எங்கெங்கு திரும்பினாலும் எட்டு திக்கும் குப்பையடா
இதைத் தட்டிக்கேட்கும் துணிவு இங்கு எவருக்கும் இல்லையடா.

மலை போலக் குவித்து வைத்து எரித்து விட்டுச் செல்கிறார்
எரிக்கக் கூடாததை எரியவிட்டு நகர்கிறார்
சுகாதார சீர்கேட்டை ஊழியரே செய்கிறார்
சகிக்க முடியாப் புகைமூட்டம் தனில் மக்கள் திணறுகிறார்.

எடுத்து வைத்த குப்பை கூட எடுக்க ஆட்கள் வருவதில்லை
காலியிடம் பார்த்து குப்பை கொட்டுவதோ நிற்பதில்லை
திருந்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட எவர்க்குமில்லை
கற்றவர்கள் அதிகமிதைச் செய்வதுதான் பொறுக்கவில்லை.

கொரோனாக் காலம் என்று தப்பிக்க முயல்பவர்கள்
ஒன்றை மட்டும் நிச்சயமாய் மனதுக்குள் நிறுத்த வேண்டும்
ஒரு பணி மட்டும் தான் செய்வோம் என்று கொள்கையென்றால்
இவர்களெல்லாம் எதற்காக என்று மக்கள் கேள்வி கேட்பார்

பதில் சொல்ல முடியாமல் நிற்பவரைத் தூற்றி நிற்பார்.

*கிராத்தூரான்*