Header Ads Widget

Responsive Advertisement

உரல் களம்- கிராத்தூரான்



வீட்டோடு ஒட்டியே உரல் களம் ஒன்று
அரிசி குத்த, மாவாட்ட, அரைப்பதற்கு என்று
தனித்தனியாய் ஒவ்வொரு வீட்டிலுமே உண்டு
உடலசைய ஒன்று கூடிப் பயன்படுத்தினர் அன்று.

பண்டிகை நாட்களில் ஓய்விருக்காது
என்றாலும் வேலையிலே தொய்விருக்காது
உலக்கை, உரலுடன்அம்மியும் குழவியும்
குத்தலும், ஆட்டலும், அரைத்தலும் நடக்கும்.

மசாலா மணமோ நாசியைத் துளைக்கும்
பலகார மாவின் மணமே ருசிக்கும்
நல்லது நல்லது நல்லது என்றே
உழைப்பவர் தின்பவர் உடலும் நினைக்கும்.

ஒன்றாய் இருப்பதும் கதை பேசி மகிழ்வதும்
வேலையின் ஊடே ஒன்றாக நடக்கும்
ஒற்றுமை ஓங்கியும் உடல் நலம் பேணியும்
இருந்த அந்நாட்களை  நினைத்தாலே இனிக்கும்.

*கிராத்தூரான்*