Now Online

Wednesday, 26 August 2020

சுயம் -பொன்இரவீந்திரன்

அகம்
சுயம்
தொலைத்தலையும்
அனாதைப்பிணம்
நான்....!
நீங்கள் சாற்றும்
நீர்மாலையோ
நீங்கள் போடும்
வாய்க்கரிசியோ
வந்து சேராது
எனக்கு...!
ஆயினும் நான்
சுயம்
சுயமே...!

*பொன்இரவீந்திரன்*


முழுமதியத் தோக்கவச்ச மூக்குத்தி மூக்கழகி


மூக்குத்தி அழகினில நிலவொளியும் கூசுதடி
இரகசியம் என்னதுன்னு மறஞ்சுநின்னு பாக்குதடி
மேடுபள்ளம் நிலவிலயும் நிறையத்தான் இருக்குதடி
உம்முகத்தப் பாக்கையில அதுயெல்லாம் தோக்குதடி.

பத்துமாசம் சொமந்துன்னப் பெத்தவளும் கண்ணுவச்சா
பாத்துப்பாத்து ஏங்கிநிற்கும் நானென்ன மிச்சமடி
பத்துவீடு உள்ளவனும் உம்முன்னே ஏழையடி
பாத்தாலே பசியாறும் உம்முகத்தின் சக்தியடி.

என்மதிய மழுங்கடிச்சு நிம்மதியக் குலையவச்சு
வெண்மதியத் தோக்கவச்ச மூக்குத்தி மூக்கழகி
சித்தநேரம் என்னருகே சிரிச்சுப்பேசி நீயிருந்து
சித்தம் தெளியவச்சு அப்புறமாப் போதாயி.

அற்புதமே வா தாயி.

   *கிராத்தூரான்*
*சுலீ. அனில் குமார்*


ஒருவனும் ஒருத்தியும்


விழிகள் கலந்திட  காதல் பிறந்திட
......விரும்பிய இருவரின் திருமண மாயினும்

விழைந்தே வந்து பெண்ணினைப் பார்த்து
......விருப்பங் கேட்டு உறுதி செய்து

செழுங்கிளைச் சுற்றம் கூடிட இனிதாய்ச்
......சிறப்புடன் நடக்கும் திருமண மாயினும்

மழையும் செந்நிற மண்ணுமாய் இருமனம்
......மகிழ்வுடன் கலந்து ஒன்றிட வேண்டும்!
(1)

பெண்ணை மணந்தவன் கணவ னாகிறான்!
....பெண்ணோ அவனின் மனைவி ஆகிறாள்.

எண்ணம் ஒன்றாய்க் கலந்தால் தானே
....என்றும் இன்பம் கூடிடு மங்கே!

கண்ணைக் காக்கும் இமையாய் அவளை
.......கணவன் காக்க வேண்டும் அன்பாய்!

மண்ணின் பொறுமை கொண்டே அவளும்
........மகிழ்வாய் அவனுடன் வாழ்ந்திட வேண்டும்!
(2)

உன்னில் நானும் என்னில் நீயும்
....உயிராய்க் கலந்தே வாழ்வோம் அன்பே!

என்றே ஒவ்வொரு கணவனும் மனைவியும்
......என்றும் பிணைந்தே வாழ்ந்திடல் நன்றாம்!

புன்னகை மாறா முகமுடன் இருவரும்
......பொறுமை கொண்டே வாழ்ந்திட வேண்டும்!

உன்னத அன்பு பெருகிட வேண்டும்!
......உடலின் இளமை வற்றிய பின்னும்!
(3)

சுடுநீர்ப் போல கணவ னிருந்தால்
......சில்லென மனைவி இருந்திட வேண்டும்!

கொடுமொழி  சினந்தே கணவன் கூறினால்
......கிளர்ந்தே மறுமொழி மனைவியும் சொல்ல

விடுபடும் நெருக்கம் இருவரின் இடையே!
.......விட்டுக் கொடுத்து வாழ்பவர் வாழ்வோ

கெடுத லின்றி தென்றலாய்ப் போகும்!
......குடும்பந் தன்னில் இன்பம் பொங்கும்!
(4)

த.ஏமாவதி
கோளூர்


பிரதிபலன்

                      
                  
தன்னையே அழித்து
ஒளிதரும் மெழுகுவர்த்திகள்
புகழ் பாமாலைகள்
கேட்டதென அறிந்தீரோ?
தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தந்த
தென்னையும் , தன்னை புகழ
கேட்டதாய் நடைமைறையில்
கண்டதுண்டோ?
வாழைமரம் பலன்தந்து
ஆயுள் முடிகையில் —தன்
கன்றினை அடுத்த நிலயில்...
பலன்தர விட்டுச்சென்றதே
எந்த மகுடம் வருமென்றோ....?
இசையால் உலகை             மகிழ்விக்கும் எந்த குயிலும்
ஏதோ ஒரு விருது வருமென்ற
எதிர்ப்பார்ப்பிலா கூவுகிறது?
மலைமுடி தொட்டு தடவி,
மலையடி தொடும் அருவி,
ஆறென ஓடி வளம்தந்தே
ஆழ்கடலில் கலக்கின்றதே....
பதிலுக்கு எதை எதிர்ப்பார்த்தது?
பாகுபாடின்றி வானம் திறந்து
மழைபொழிவிக்கும் மேகம்.....
சிலை வைப்பார் தனக்கும்
என்று  எதிர்ப்பார்த்தால்......
ஈடாக எதைத்தருவோம்?
பிரதிபலன் எதிர்ப்பார்த்தே....
பணியினை ஆற்றும் மானிடரே!
கீதைசொல் மறந்தீரோ?
பாதைமாறிப் போவீரோ?
நரகம் போக பாதையை
நலமெனக் காண்பீரோ!

🌹🌹வத்சலா🌹🌹


வார்த்தைகள்

வெளிவந்த
வார்த்தைகளுக்கு
இருக்கும்
வலிமையை விட

வெளிவராமல்
விழுங்கப்பட்ட
வார்த்தைகளுக்கு
வலிமை அதிகம்

ஏனெனில்...

விழுங்கப்பட்ட
வார்த்தைகள்
கண்ணீர்
துளிகளாய்
கண்களிலிருந்து
வெளிவந்து
கொண்டிருப்பதால்...

✍️ கவி ரசிகை.....
               .....சுகன் தீனா


Friday, 14 August 2020

வந்தேமாதரம்எந்த நாடும் எந்தன்  சொந்த நாட்டிற்கு ஈடு இல்லை
பார் வியந்த பாரதம் போல் வேறுநாடு பாரிலில்லை
இயற்கை வளம், செயற்கை வளம் எதிலுமே குறைச்சலில்லை
மனிதவளம், அறிவுவளம் நிறைந்த நாடு வேறு இல்லை.

நட்பு என்றும் உதவி என்றும் வந்தவரை விட்டதில்லை 
பகையோடு பார்ப்பவர்கள் கண்பறிக்க பயமுமில்லை
போதிமர புத்தன் வழி செல்வதற்கும் தயக்கமில்லை
மோதிப்பார்க்க வந்தவர்கள் மோகம் வெல்ல விட்டதில்லை.

வேற்றுமைகள் உண்டு இங்கே சொல்வதற்குத்  தயக்கமில்லை
வேண்டும் நேரம் ஒன்றுபட்டு பகைவிரட்டத் தவறவில்லை
வந்தே மாதரம் என்று ஓங்கி ஒலிப்பதற்கு 
தடைபோட்ட நாட்களிலும் ஒலிக்காமல் விட்டதில்லை.

அண்டைநாடுகள் அனைத்தும் சண்டை நாடாய் மாறினாலும்
சந்து பொந்துக்குள் நுழைந்து தொந்தரவாய்த் தந்தாலும்
வந்தேமாதரம் என்றொலிக்கும் கோஷம் போதும்
ஒன்றுபட்ட இந்தியாவை சக்தியூட்ட அது போதும்

சக்தி காட்ட அது போதும்.

*அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்

  🇮🇳 கிராத்தூரான்🇮🇳

Wednesday, 12 August 2020

ரதி மன்மதன்அழகோடு அழகு சேர்ந்த
இணை ரதி மன்மதன்
அனைவருமே அவரவர்கள்
நினைப்பில் ரதி மன்மதன்.

கருப்பென்றும் சிவப்பென்றும்
நிறம் பார்த்து நிற்காமல்
மனதோடு மனது சேர்ந்தால்
அவர்கள் ரதி மன்மதன்.

நீயின்றி நானில்லை 
நானின்றி நீயில்லை
என்ற எண்ணம் இருந்தாலே
அவர்கள் ரதி மன்மதன்.

அவனுக்காய் அவள் துடித்து
அவளுக்காய் அவன் துடித்து
நலன் நாடும் குணம் படைத்தால் 
அவர்கள் ரதி மன்மதன்.

அழகும் அறிவும் இருந்தாலும்
அனுசரணை இல்லையென்றால்
எப்படித்தான் ஆவார்கள்
அவர்கள் ரதி மன்மதன்.

போட்டி போட்டுக் காதலித்தும் 
பொறுமை காத்து அரவணைத்தும் 
வாழும் வாழ்க்கை இல்லையென்றால்
ஏது ரதி மன்மதன்.

அவரவர்கள் மனசாட்சியை
அவரவர்கள் கேட்டு பின்னர்
அவரவரே  சொல்லவேண்டும்
யார் தான் ரதி மன்மதன்

*கிராத்தூரான்*

முயற்சிஎது வந்து தடுத்தாலும்
எதிர் கொள்ள வைப்பது
முடியாதென்று தளராமல்
முடித்துக் காட்டி நிற்பது.

இவர் யாரென்று மற்றவரை
வியந்து பார்க்கச் செய்வது
இவர் தானென்று பலபேரைப்
பின்தொடரத் தூண்டுவது.
 
பிணி தளர வைத்தாலும்
துணிவு தந்து துணைப்பது
பனிச்சிகரம் ஏறிடவும்
துணிச்சலைக் கொடுப்பது.

அயற்சியை ஓரங்கட்டி
உயர்ந்து நிற்கும் சிறப்பது
சோம்பேறியாய் இருப்பவர்கள்
எப்போதும் வெறுப்பது.

குறை காண முடியாத
உன்னதமாம் உயர்வது
குன்றிலிட்ட விளக்கு போல
எந்நாளும் ஒளிர்வது.

தணியாத தாகத்தின்
விளைவாக வருவது
தனியாக நின்றாலும்
தனித்துவத்தைத் தருவது.

முயற்சி உடையோர்க்கு
இகழ்ச்சியே கிடையாது
முயலாமல் இருப்பவர்க்கோ...
எந்நாளும் விடியாது.

    *கிராத்தூரான்*


Thursday, 6 August 2020

இன்றைய உலகம்!அடிமைப்படுத்தும்
அற்பத்தனம்
ஆதிக்க மனப்பான்மை
இழிநிலை எண்ணமுள்ளவருக்கே
ஈனப்பிறவிகளுக்கே!

உன்னைப் புகழ்வர்
ஊக்கம் தருவர்
எதுகைமோனையின் நாயகனென
ஏக்கப்பெருமூச்சு விடுவர்
ஐயமேயில்லை!ஆம்!

ஔிந்துமறைந்து
ஓசையின்றி எல்லாவற்றையும்
உண்மைக்குப் புறம்பாக திரித்து
ஓமூடிவுக்கு வழிவகுத்து
ஔவியத்தால்
புதைப்பர்!

கடுகளவும் கட்டுப்பாடின்றி
கருநாகத்தின் விடத்தைக் கக்குவர்!
காலம் கடந்தாலும்
மறக்கமுடியாத
கிசுகிசுப்புகளை 
மனச்சாட்சியை மறந்து
கீழ்த்தரமாக 
குள்ளநரியாக மாறி
கூட்டத்திலே கூழைக்கும்பிடுபோடும்
கெடுதலின் ஊற்றுக்கண்ணாக
கேட்காமலேயே
கைங்கர்யத்தை காண்பிப்பர்!

கொடுமையிலும் கொடுமையாக
கோபத்தைத் தூண்டுவதாக
கௌரவத்தன்மையை
சிதறடிப்பர்!
சலிக்கின்ற வடிக்கட்டியிலும்
சாதுர்யமாக பொய்மூடைகளை மட்டும்
அவிழ்த்து உண்மைகளை உறையவைப்பர்!

சிறுமைப்புத்தியால்
சீற்றத்தை உருவாக்கி
ஏமாற்றத்தை ஏரோட்டி
தேரோட்டி
சுயமரியாதைக்கே
சூனியம் வைப்பர்!

செல்லாக்காசென்று மற்றவரை ஆக்கிட
சேர்த்த கூட்டத்தை
சைத்திரியமில்லாதவர்களாக்கி
சொல்லியவண்ணம் செய்திட
சோர்வின்றி உழைப்பர்!
சௌந்தர முகத்திலும்
சாணிபூசித் தெளிப்பர்!

தத்துவத்தையும்
தானென்ற ஆதிக்கத்தால்
தகரடப்பாவில் அடக்கி
திரஸ்தமான பொய்களால்  ஆளுமைத்திறன்களையும் மடக்கி
தீக்குழியில் தள்ளிடுவர்.!

துன்பக் கலசத்தை
துவண்டு போகச்செய்யுமளவு
தூண்டிலிட்டு வேடிக்கை பார்ப்பர்!
தெட்டுதலில் சாமர்த்தியம் காட்டி
தேவைக்கெனும்போது மட்டும் தைவமாய் கிடைத்ததென வார்த்தைவலையில் கூட்டி
தொட்டதையெல்லாம் குறையென தொடக்க காலந்தொட்டு
தோல்வியின் விளிம்புக்குச் செல்லும்வரை
கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு
தௌத்தியத்தை அகிலமும் பரப்பிவிடுவர்!

நம்பியதற்கு நாகப்பாம்பின் நஞ்சைத்
தெளித்து
நினைவிருக்கும்வரை
நீண்ட துயரங்களையெல்லாம்
கணக்கிலிருந்து கழித்து
நுழையமுடியாத உண்மையிடத்திலும்
நூலிழையில் பொய்யினைத் தெளித்துவிடுவர்!

நெளிவுசுழிவுகளை அறிந்து
நேர்வழியில் செல்லாது
குதர்க்கத்தனத்துடன் குறுக்குவழியில் புகுந்து
நேசத்தையும் பாசத்தையும்
நைகரத்தில் ஆழ்த்துவர்!
நொடிக்குநொடி
நோட்டமிட்டு நோன்பும் இருந்து  வள்ளலார் வழியென வக்கிரப்புத்தியைக் காட்டுவர்!

படமெடுத்து ஆடும் பாம்பைப்போல
பிதிர்வனம் செல்லும்வரை
பீலகமாய் கெட்ட எண்ணத்துடனே சுற்றிவருவர்!
புனைந்தெடுத்த பொய்யையும்
பூமாலையாக்கி
பூர்வசென்ம பகையை
முடித்ததைப்போல
பெரியகுணத்தை 
இதில் காட்டுவர்!

பேய்ப்பிடியை இரும்புப்பிடியாய்
கூட்டுவர்!
பைம்பொன்னையும்கூட
பொய்பொட்டலமென
நிலைநாட்டுவர்!
போக்கடித்தலிலே
பௌமனென பெருமையைப் பூட்டுவர்!

மண்ணுக்குப் பாரமாக
மாயதந்திரத்தைக் 
காட்டி மகிழ்வதில்
மாலனாக
மித்தியாவாசகத்தை
உரைப்பதில்
மித்தியாவாதியாக
மீதமிருக்கும் காலத்திலும்
மீக்கூற்றுக்கு அடிமையாக
முடிவுகட்டுவதிலே
முகனைக்காரனாக
மூடுமந்திரம் இடுவதிலே தந்திரனாக
மெய்ப்படுதலுக்கு பாடைகட்டி
மேன்மைமிக்க குணமுள்ளவர்க்கு ஆறடிக்குழி பறி்க்கும்வரை
மைத்திரத்திலே
விடம் தடவி
மொண்டுபிடித்தலில்
வீரனாக சூரனாக
மோட்டுத்தனத்திலே
உடும்புப்பிடியாக  மெளத்திகமாலையணிந்து வாழும் மௌகலிகமே!

யதுவாக
யாவருக்கும் தானேயெனக்கூறி
யுத்தக்களத்தில் புறமுதுகிட்டோடும்
யூகியாக நாளுமே!
யோக்கியவாராக
காட்டிக்கொண்டு
யௌவனத்தையே
சிதைத்திடும் ஆற்றல்வாய்ந்தவர்கள்!

எல்லாம் அறிந்த முனிவனும் இல்லை!
ஒன்றுமேயறியா மடையனும் இல்லை!
இதுவே இயற்கையின் நியதி!

எல்லாரும் நல்லவர்களே!வல்லவர்களே!

எவர் எவரையும் அடிமைப்படுத்த எவருக்குமே தகுதியில்லை!

வாழும் காலம்வரை
தானென்ற அகந்தையில் வீழ்ந்துவிட்டால் சாபமே பின்தொடரும்.

இவண்
அன்றும் இன்றும் என்றும்
தமிழே உயிர்மூச்சென
ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்.

தமிழ் வாசல்

மூத்த மொழி என்று சொல்லும் அத்துணை மொழிகளுக்கும்
வாசலாக முன்னிருந்து
நுழைய விட்ட செம்மொழி.

வல்லினமும் மெல்லினமும் இடையினமும் இணைந்திருந்து
இனிமையினை எடுத்துரைத்து
நிமிர்ந்து நின்ற தமிழ் மொழி.

அம்மொழியைப் படித்துவிட்டு
அதனழகை வியந்து விட்டு
அதன் பெருமை உணர்ந்து விட்டு
அடியெடுத்து வைத்திடு.

உள்ளுக்குள் வந்துவிட்டால்
உணர்வுக்குள் ஒன்றிவிட்டால் 
வெளியேறும் எண்ணமெல்லாம்
வழிமாறும் உணர்ந்திடு.

பூட்டிவைக்கும் எண்ணமில்லை
திறந்து செல்லத் தடையுமில்லை
துறந்து செல்ல முடியுமென்றால்
மறந்து விட்டுச் சென்றிடு.

தாயென்ற புரிதலுடன் 
தயை வேண்டி வருவதென்றால்
அரவணைக்கத் திறந்திருக்கும்
கதவு என்றும் அறிந்திடு.

  *கிராத்தூரான்*
*சுலீ. அனில் குமார்*

என்று தணியும் தனிமை


நெருங்கிய உறவு கூட
தூரத்தில் உறவாக
இணைபிரியா நட்பு கூட
தொலைவினிலே நட்பாக.

ஒன்றாக அமர்ந்ததும்
கதை பேசி மகிழ்ந்ததும்
கதையாக மாறிவிட்ட
கலிகால நிகழ்வாக.

நேரம் போக்க படம் பார்த்து
நிறைய பேரைத் தினம் பார்த்து
அளவளாவி மகிழ்ந்ததெல்லாம்
அன்றொருநாள் என்பதாக.

வந்தோரை வரவேற்பதும் 
விருந்தோம்பலால் மகிழ்விப்பதும்
உறவினர்கள் வீடு சென்று
உவந்திருப்பதும் நினைவாக.

அலைபேசியும் தொலைக்காட்சியும்
அதிக நேரம் எடுத்துவிட
பேச்சு கூட இல்லாமல்
தவிப்பாகத் தனிமை.

நோய் தவிர்க்க இருக்கின்ற
பொதுவெளியில் இடைவெளி
மனநோயை உருவாக்கும்
கொடுமையாம்  தனிமை.

தனிமை இன்று இனிமையல்ல
தவிப்பவர்கள் கொஞ்சமல்ல
அனைவருமே கேட்கின்ற
ஒரே ஒரு கேள்வி......

அனைவருமே கேட்கின்ற
ஒரே ஒரு கேள்வி
என்று தணியும் தனிமை.

*கிராத்தூரான்*

இயற்கையோடு நீ


வெட்ட வெட்ட துளிர்க்கும்
மரம் போல் துளிர்க்கின்றது
உன்னோடான காதல்.....

பச்சைப் பசேலென்ற
மலைகள் போல் குளிர்கின்றது
உன் நினைவு....

பூந்தோட்டத்தில் வண்ண
மயமாய் விரிந்திருக்கும்
பூக்கள் போன்ற உன்
கண்கள்.......

சிணுங்கி விட்டுச் செல்லும்
தென்றல் போல் உன் 
மூச்சுக் காற்று...

இசைக்கேற்று அசைந்தாடும் 
மரங்கள் போன்ற உன் 
ராஜ நடை.....

காலை நேரச் சூரியனை 
ஞாபகப் படுத்தும் 
உன் அழகிய முகம்...

நட்சத்திரங்கள் உயிர் 
பெற்று வந்ததோ 
பூமியில் என 
அதிசயிக்க வைக்கும் 
உன் புன்னகை....

இறைவன் படைத்த
அனைத்திலும் நிழல்
ஆடுகின்றது உன் 
நினைவுகள்....

பால.ரமேஷ்

ஆடுகிறாள் காவிரி!பிறந்தவீட்டை விட்டுவிட்டு
புகுந்தவீட்டில்
வாழ்வதற்கு
பெருகியோடும்
பிரியத்துடன்
ஆடுகிறாள் காவிரி!
ஆடியிலே இவள்
புதுப்பெண்ணாவாள்!
புதுமணத் தம்பதிகள் ஆடியிலே பிரிந்திருக்க காவரியோ கரைகாண ஆசையோடு கண்ணான கணவனாம்
கடலழகனைக் கூடிடவே 
காற்றை சலங்கைகளாய்க்
கட்டிக்கொண்டு
கணவனைக் காண்பதால்
மேனியெங்கும்
நெளிந்தோடும்
நாணத்தைப் பிறரறியாவண்ணம்
இருமருங்கும் நின்றிருக்கும்
அண்ணன்மாராம்
மரஞ்செடிகொடிகள்
அன்போடு சீரெனத்
தந்த வண்ணமலர்ச்
சேலைக்குள் மறைத்தே
தந்தன தந்தன என
தாளம்பாடி வருகிறாள் காவிரி!
ஆடிப் பதினெட்டில்
சுபமுகூர்த்தவேளை
நாடி வருகின்ற அவளை வரவேற்க
ஒளிரும்  தீபமேந்தி
மணக்கும் மலர்தூவி
பெண்கள் காத்திருக்க!புத்தம்புது தம்பதியர் இனிக்கும் தம்இல்லறத்தில்
இவள்துணைநாடி
வரவேற்க
தகிடதகிடப் பொங்கிப் பெருகிட
திமிதிமியென்று
சிலிர்த்துப் பெருகிட
ஆடிக்கொண்டே
ஓடிவருகிறாள் காவிரி!
நன்மைகள் கோடி
நமக்கு தந்தபடி!

*த.ஹேமாவதி*
*கோளூர்*

நட்பு நட்பு. நட்பு

                         
உறவுகள் மேகம் போல
கூடும் பிரியும் பலநேரம்!
ஆனால்.....
நட்பு என்பது வானம்போல
விரிந்து பரந்திருக்கும் 
எந்நாளும்!— எனும்
தத்துவத்தை எனக்கு
கற்றுத்தந்தது நட்பே!
வலிகளெல்லாம் 
நீர்க்குமிழியாய் 
உடைந்தே போயுள்ளது
என்னுடன் நீ இருக்கையிலே....!
ஆயிரம் விண்மீன்கள்
ஆகாயத்தில் ஒளிர்ந்தாலும்
இரவுக்கு அழகு என்பது
ஒற்றை நிலவால் தானே
நிதர்சனமாகிறது?
ஆயிரம் உறவுகள் எனை
சூழ்ந்திருந்தபோதும்
 நட்பு மட்டும் நானே
என் பாதைக்கு தீபமானது?
உறவுகளின் அன்பின்
அளவுகோலாய் நிற்பது
அனேக நேரங்களில்
பணம் மட்டுமே...!
நிரந்த அன்புக்கு
திறவுகோல் என்பது
நட்பு அன்றி வேறேது?
நட்பில் துரோகம் என்பது
கொடூரமானது!
பரிகாரங்கள் எல்லாம்
பரிகாசங்கள் செய்யும்....
தீர்வு இல்லையென்றே வையும்!
சண்டையிட்டு நண்பர்
பிரிந்து சென்றிடினும் ....
ஒருவர் ரகசியத்தை
மற்றவர் உயிராய் காப்பது....
நட்பின் நெறி தவறாமையை
காட்டுகிறது —- ஏனெனில்
நட்புக்கும் கற்பு உண்டு!
பணம் சம்பாதிக்க வழிகள்
பலவகை உண்டு—ஆனால்
நட்பை சம்பாதிக்க புன்னகையென்ற
ஓர்வழி மட்டுமே உண்டு!
தவறுகளை ஆமோதித்த
நேரங்கள் மிக அரிது!
தட்டிக்கேட்டு திருத்திய
நேரங்களே மிகப்பெரிது!
நட்பில் சண்டைகள்
வலித்ததை விடவும்
நட்பில் மௌனங்கள் தந்த
வலிகளே ஏராளம்!
உலகத்தில் மரணங்கள்
ஏராளம் ஏராளம்- நட்பின்
சாகாவரம் என்றும் தாராளம்!

🌹🌹வத்சலா🌹🌹

மனத்தளவில் ......

                  
மனத்தளவில் உனக்கு
அணுவளவு தன்னம்பிக்கை 
வேர்விட்டால் போதும்....!
தடையென உன் முன் 
கிடந்தவை யாவும்
இடிந்து நொறுங்கிப்போகும்!
வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும்...
அனைத்தும் செழித்து
படர்ந்து வளரும்!

மனத்தளவில் சீரிய எண்ணம்
முளைவிட்டால் போதும்...
சுமையென துயர்தந்த யாவும்
விலகி  நகர்ந்து மறைந்தே போகும்!
நல்லோர்க்கு நலம்சேர்க்கும்
எல்லாமே பலம் சேர்த்து பரவி...
தொடர்ந்திடும்!

மனத்தளவில் சிறு பொறியாய்
மாற்றம் கனன்றால் போதும்...
பொய்மைக்குத் துணைபோன யாவும்
உடைந்து சிதைந்து
சிதறிப்போகும்!
உண்மைக்கு துணையாகும் யாவும்
நிமிர்ந்து நிலைத்து ....
வலிமைசேர்க்கும்!

மனத்தளவில் நேர்மை
சிறுவித்தாய் முளைத்தாலே போதும்!
கீழ்மைக்கயமை நினைவெல்லாம் ...
கிழிபட்டு ஒழிக்கப்பட்டு
அனலிடை வீழ்த்தப்படும்!
உன்னதத்தின்  சிறப்பங்கே
உயர்ந்து வளர்ந்தே....
நிலைத்திடும்!

🌹🌹வத்சலா🌹🌹

Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS