Header Ads Widget

Responsive Advertisement

இன்றைய உலகம்!



அடிமைப்படுத்தும்
அற்பத்தனம்
ஆதிக்க மனப்பான்மை
இழிநிலை எண்ணமுள்ளவருக்கே
ஈனப்பிறவிகளுக்கே!

உன்னைப் புகழ்வர்
ஊக்கம் தருவர்
எதுகைமோனையின் நாயகனென
ஏக்கப்பெருமூச்சு விடுவர்
ஐயமேயில்லை!ஆம்!

ஔிந்துமறைந்து
ஓசையின்றி எல்லாவற்றையும்
உண்மைக்குப் புறம்பாக திரித்து
ஓமூடிவுக்கு வழிவகுத்து
ஔவியத்தால்
புதைப்பர்!

கடுகளவும் கட்டுப்பாடின்றி
கருநாகத்தின் விடத்தைக் கக்குவர்!
காலம் கடந்தாலும்
மறக்கமுடியாத
கிசுகிசுப்புகளை 
மனச்சாட்சியை மறந்து
கீழ்த்தரமாக 
குள்ளநரியாக மாறி
கூட்டத்திலே கூழைக்கும்பிடுபோடும்
கெடுதலின் ஊற்றுக்கண்ணாக
கேட்காமலேயே
கைங்கர்யத்தை காண்பிப்பர்!

கொடுமையிலும் கொடுமையாக
கோபத்தைத் தூண்டுவதாக
கௌரவத்தன்மையை
சிதறடிப்பர்!
சலிக்கின்ற வடிக்கட்டியிலும்
சாதுர்யமாக பொய்மூடைகளை மட்டும்
அவிழ்த்து உண்மைகளை உறையவைப்பர்!

சிறுமைப்புத்தியால்
சீற்றத்தை உருவாக்கி
ஏமாற்றத்தை ஏரோட்டி
தேரோட்டி
சுயமரியாதைக்கே
சூனியம் வைப்பர்!

செல்லாக்காசென்று மற்றவரை ஆக்கிட
சேர்த்த கூட்டத்தை
சைத்திரியமில்லாதவர்களாக்கி
சொல்லியவண்ணம் செய்திட
சோர்வின்றி உழைப்பர்!
சௌந்தர முகத்திலும்
சாணிபூசித் தெளிப்பர்!

தத்துவத்தையும்
தானென்ற ஆதிக்கத்தால்
தகரடப்பாவில் அடக்கி
திரஸ்தமான பொய்களால்  ஆளுமைத்திறன்களையும் மடக்கி
தீக்குழியில் தள்ளிடுவர்.!

துன்பக் கலசத்தை
துவண்டு போகச்செய்யுமளவு
தூண்டிலிட்டு வேடிக்கை பார்ப்பர்!
தெட்டுதலில் சாமர்த்தியம் காட்டி
தேவைக்கெனும்போது மட்டும் தைவமாய் கிடைத்ததென வார்த்தைவலையில் கூட்டி
தொட்டதையெல்லாம் குறையென தொடக்க காலந்தொட்டு
தோல்வியின் விளிம்புக்குச் செல்லும்வரை
கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு
தௌத்தியத்தை அகிலமும் பரப்பிவிடுவர்!

நம்பியதற்கு நாகப்பாம்பின் நஞ்சைத்
தெளித்து
நினைவிருக்கும்வரை
நீண்ட துயரங்களையெல்லாம்
கணக்கிலிருந்து கழித்து
நுழையமுடியாத உண்மையிடத்திலும்
நூலிழையில் பொய்யினைத் தெளித்துவிடுவர்!

நெளிவுசுழிவுகளை அறிந்து
நேர்வழியில் செல்லாது
குதர்க்கத்தனத்துடன் குறுக்குவழியில் புகுந்து
நேசத்தையும் பாசத்தையும்
நைகரத்தில் ஆழ்த்துவர்!
நொடிக்குநொடி
நோட்டமிட்டு நோன்பும் இருந்து  வள்ளலார் வழியென வக்கிரப்புத்தியைக் காட்டுவர்!

படமெடுத்து ஆடும் பாம்பைப்போல
பிதிர்வனம் செல்லும்வரை
பீலகமாய் கெட்ட எண்ணத்துடனே சுற்றிவருவர்!
புனைந்தெடுத்த பொய்யையும்
பூமாலையாக்கி
பூர்வசென்ம பகையை
முடித்ததைப்போல
பெரியகுணத்தை 
இதில் காட்டுவர்!

பேய்ப்பிடியை இரும்புப்பிடியாய்
கூட்டுவர்!
பைம்பொன்னையும்கூட
பொய்பொட்டலமென
நிலைநாட்டுவர்!
போக்கடித்தலிலே
பௌமனென பெருமையைப் பூட்டுவர்!

மண்ணுக்குப் பாரமாக
மாயதந்திரத்தைக் 
காட்டி மகிழ்வதில்
மாலனாக
மித்தியாவாசகத்தை
உரைப்பதில்
மித்தியாவாதியாக
மீதமிருக்கும் காலத்திலும்
மீக்கூற்றுக்கு அடிமையாக
முடிவுகட்டுவதிலே
முகனைக்காரனாக
மூடுமந்திரம் இடுவதிலே தந்திரனாக
மெய்ப்படுதலுக்கு பாடைகட்டி
மேன்மைமிக்க குணமுள்ளவர்க்கு ஆறடிக்குழி பறி்க்கும்வரை
மைத்திரத்திலே
விடம் தடவி
மொண்டுபிடித்தலில்
வீரனாக சூரனாக
மோட்டுத்தனத்திலே
உடும்புப்பிடியாக  மெளத்திகமாலையணிந்து வாழும் மௌகலிகமே!

யதுவாக
யாவருக்கும் தானேயெனக்கூறி
யுத்தக்களத்தில் புறமுதுகிட்டோடும்
யூகியாக நாளுமே!
யோக்கியவாராக
காட்டிக்கொண்டு
யௌவனத்தையே
சிதைத்திடும் ஆற்றல்வாய்ந்தவர்கள்!

எல்லாம் அறிந்த முனிவனும் இல்லை!
ஒன்றுமேயறியா மடையனும் இல்லை!
இதுவே இயற்கையின் நியதி!

எல்லாரும் நல்லவர்களே!வல்லவர்களே!

எவர் எவரையும் அடிமைப்படுத்த எவருக்குமே தகுதியில்லை!

வாழும் காலம்வரை
தானென்ற அகந்தையில் வீழ்ந்துவிட்டால் சாபமே பின்தொடரும்.

இவண்
அன்றும் இன்றும் என்றும்
தமிழே உயிர்மூச்சென
ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்.