வெகுதூரம் செல்கின்ற பிள்ளையைப் பார்த்து,
வேதனை தாங்காமல் வேறுபக்கம் பார்த்து, கண்ணீரை வடிக்கின்ற தாய்மனதைப் பார்த்து சொல்லத்தான் தோன்றியது,
சொல்லாமல் சொல்லிவிட்டேன்
இந்த சிப்பிக்குள்ளே ஒரு கடலா?
தயை வேண்டி நிற்காமல்
தன்காலில் நிற்பதற்கு,
தயங்காமல் பலவேலை செய்கின்ற பிள்ளைகளை,
தட்டிக்கொடுத்தபின்னே
எட்டி நின்று கண்கலங்கும்,
தன் மகனின் சிரமத்தில் தாங்காமல் அழுது நிற்கும்
தந்தையின் அன்பு அது கேட்கத்தான் வைக்கிறது
இந்த சிப்பிக்குள்ளே ஒரு கடலா?
மணம் முடித்துக் கொடுத்தமகள்
மருமகன் வீடு செல்வதற்கு,
மனதில்லா மனதோடு மணநாளில் நிற்கையிலே,
மறைவாகச் சென்று நின்று
அழுது விட்டு வந்து நின்று,
அழுகையோடு வழியனுப்பும் பெற்றோரைப் பார்க்கையிலும்
அறியாமல் சொல்வேன் நான்
இந்த சிப்பிக்குள்ளே ஒரு கடலா?
ஆம்
கடலுக்குள் இருக்கின்ற சிப்பியல்ல சிறப்பு,
சிப்பிக்குள் இருக்கின்ற கடல் மிகவும் சிறப்பு.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*