தொட்டுவிடும் தூரம் தான் வானம்,
சொல்லிக்கொடுத்தார்கள் எனக்கு,
தொட்டுப்பார்க்க வேண்டும் ஒருநாள்
ஆசைப்பட்டிருக்கின்றேன் நானும்.
சந்திரனில் கால்பதித்து காலாற நடக்கவேண்டும்,
வெண்ணிலவைக் கொண்டுவந்து வீட்டு மாடியில் வைக்கவேண்டும், இன்னும் பல ஆசைகளில் மூழ்கியது எந்தன் மனம்.
எட்டிநின்று பார்க்கையிலே துள்ளிக்குதிக்கிறதே! கிட்டச்சென்று பார்த்தாலே மனம் அள்ளிப் பருகாதா!
எல்லாமே கனவுகளும் ஆசைகளுமாயிருக்க, நனவாகும் நாள்பார்த்து எதிர்பார்த்து நானிருந்தேன்.
வெண்ணிலவைக் கைகளிலே பிடித்து நீயும் மகிழ்கின்றாய்,
முயற்சியேதும் செய்யாமல் உயர்ச்சியேது என்கின்றாய்,
முழுநிலவைக் கைகளிலே பார்த்து நானும் மகிழ்கின்றேன்,
வளர்பிறையை உன் முகத்தில் கண்டு நானும் இரசிக்கின்றேன்.
ஆசை வெறும் ஆசைகளாய் இருப்பதில் தான் பயன் ஏது?
கனவுகளை நனவாக்கிப் பார்ப்பதற்கு நிகரேது?
ஒரு நொடியில் புரியவைத்தாய்,
உவகையிலே திளைக்க வைத்தாய்,
சாதிக்கப்பிறந்தவள் நீ
என்பதையும் உணரவைத்தாய்.
*சுலீ. அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி.