பசியெடுத்து நடை தளந்து
ஊர் தேடி வருவார்கள்
ஊரெங்கு உள்ளதென்று தெரியாமல் தேடுவார்கள்
வழி சொல்ல ஆளின்றிக் கலங்கியே நிற்பார்கள்
தொலைவிலே கோபுரம் கண்டாலோ மகிழ்வார்கள்
அதற்கென்றே கோபுரத்தை உயரமாகக் கட்டினார்கள்
சொன்னாராம் காமராசர் கோபுரத்தின் காரணத்தை.
வெள்ளம் வந்து சூழ்ந்தாலோ விளைநிலங்கள் அழிந்துவிடும்
சேமித்த தானியங்கள் தண்ணியிலே சென்றுவிடும்
விதைப்பதற்கு விதையின்றி ஊர்சனமே பாடுபடும்
கோபுரக்கலசங்கள் விதைதனையே காத்துவிடும்
வெள்ளம் வற்றிப் போனபின்னே அவ்விதைகள் உதவிவிடும்
அதனாலும் கட்டினாராம் உயரமாக கோபுரத்தை.
பறவைகளின் உறைவிடமாய் கோபுரங்கள் மாறிவிடும்
தெய்வபக்தி பறவைகளைக் கொல்லாமல் காத்துவிடும்
கலையழகின் தனியழகை கோபுரங்கள் சொல்லிவிடும்
கண்டுகொள்ளவில்லையென்றால் கோபுரமோ விரிசல்விடும்
ஊர்மக்கள் கரிசனத்தை கோபுரமே சொல்லிவிடும்
கோ அவனின் ஆட்சிக்கு சாட்சியமாய் நின்றுவிடும்.
காப்பதற்காய் கோபுரங்கள் கட்டினார்கள் முன்னே
அழிப்பதற்காய் கோபுரங்கள் வைக்கிறார்கள் பின்னே
அலைவரிசை அதிர்வுகளால் குருவிகூடக் கண்ணே
அழிந்து கொண்டு வருகிறதே சொல்வது தான் என்னே?
கோவிலில்லா ஊரினிலே குடியிருக்க வேண்டாம்
கோபுரத்தைப் பார்க்காமல் நீ உறங்க வேண்டாம்
கோபுர தரிசனத்தை நீ தவிர்க்க வேண்டாம்
கோபுரங்கள் சாய்வதில்லை
நீ மறக்க வேண்டாம்
சொன்னார்கள் பெரியோர்கள் அந்நாளில் அறிந்து
கோபுரத்தின் பயனதனை நன்றாகப் புரிந்து.
*சுலீ. அனில் குமார்.*