அரசனுக்கு அடிமையாய் வாழ்ந்து கொண்டிருந்தோம்
ஆங்கிலேயன் அடிமையாய் வாழ்ந்து விட்டுப் போவோம்
என்றே இருந்தது ஆங்கொரு ஒரு கூட்டம்.
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்
எனக்கது ஏதும் கவலையே இல்லை
என் உணவுக்கு இங்கு குறையேதுமில்லை என்றே இருந்தது இன்னொரு கூட்டம்.
உண்ணவும் உறங்கவும் பிறந்தவன் நானடா
கால்பிடித்து வாழ்வதில் குறை தான் ஏதடா
என் பிழைப்பு நடக்கிறது அது போதும் எனக்கடா
கவலையின்றித் திரிந்தது மேலும் ஒரு கூட்டம்
அனைவரையும் எழுப்பியது ரௌலட் சட்டம்.
சிந்திக்க வைத்தது அந்தச் சட்டம்
சட்டத்தை எதிர்த்துக் கூடியது கூட்டம்
ஜாலியன் வாலா பாகில் பெரும் கூட்டம்
அங்கு தான் நடந்தது வெறிபிடித்த ஆட்டம்
அசுரனாம் டயரின் கொலைவெறி ஆட்டம்.
மாண்டவர் எத்தனை மீண்டவர் எத்தனை
ஆண்டவர் கண்களில் மகிழ்ச்சியோ அத்தனை
கண்டவர் கேட்டவர் கொண்டனர் சிந்தனை
அனைவரும் செய்தனர் வெள்ளையன் நிந்தனை.
மறக்கவே முடியாது அது தரும் வேதனை
இருந்தாலும் இருக்கிறது அதிலும் ஒரு சாதனை
அதுதான் தந்தது பகத்சிங் என்ற வீரனை
அது தான் வளர்த்தது சுதந்திரப் போரினை
அதுவும் தான் அளித்தது சுதந்திர வாழ்வினை.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*