முதல் ஆறுநாட்களில்
மனம் சொல்லும்
வாரக்கடைசி நாள்
ஞாயிற்றில் பார்த்துக் கொள்ளலாம்! இப்படி சொல்லி சொல்லியே நிறைய முடிக்கவேண்டியவைகளின்
சுமைதாங்கியாகவே
பணிக்குச் செல்லும் பெண்களின் ஞாயிறுகள் அமைந்துவிடும்!
தாமதமாய்த் துயிலெழுந்தாலும்
துரிதமாய்ச் சமைத்துப் பரிமாற வேண்டும்!
வீட்டின் கழிவறை உட்பட எல்லா அறைகளின் தூய்மைப்பணியோடு
துணிகளும் பாத்திரங்களும் தூய்மைப் படுத்திக் கொள்ள காத்துநிற்கும்!
அடுத்தவாரத் தேவைக்காக அரைத்து வைத்துக் கொள்ள
தண்ணீரிலே ஊறிக் காத்திருக்கும் அரிசியும் உளுந்தும்!
துவைத்த துணிகளை மடித்து வைக்கும் போது
மாலை முடிந்து இரவு தொடங்கும் அந்த இடைபட்ட நேரத்தில்
திடீரென வருகைத் தரும் விருந்தினரைக் கவனித்து வழியனுப்ப
மெல்ல இருள் கவிழ்ந்து அடுத்து
இரவுச் சாப்பாட்டுவேளை தொடங்கிவிடும்!
இவ்வளவுக்கும் மத்தியிலே
குழந்தைகளின் தேவைகள்
வீட்டுப் பெரியோர்களின் தேவைகள்
கணவனின் தேவைகள் யாவையும் முடித்து
இடைஇடையே சிணுசிணுக்கும் அலைபேசியையும் கையிலெடுத்து காதோரம் வைத்து சொந்தபந்தங்களுடன்
பேசி உறவை வளர்த்து
புலனத்தில் பதிவுகளைப் பதித்து மறுதினம் பணிசெல்ல
மனதையும் உடைமைகளையும்
தயார்படுத்திக் கொண்டு
அப்பப்ப இடைச்செருகலாய்
தொலைகாட்சியையும்
எட்டிப் பார்த்து
மொத்தமாய்ப் படுக்கையில் விழும்போது ஆகிவிடும் மணி இரவு பத்தரை!
உடனே வராது நித்திரை!
இந்த ஞாயிறு முடிக்காததை எல்லாம் எப்படியும் அடுத்த ஞாயிற்றில் முடித்துவிடவேண்டும்
என உள்மனம் சொல்ல சொல்ல......
இலேசாக கண்களைத் தழுவும் தூக்கம்..........
என இப்படித்தான் கழிந்துக்கொண்டே இருக்கிறது வேலைக்குச் செல்லும் பெண்களின் ஞாயிறு நாழிகைகள் யாவும்!
*த.ஹேமாவதி*
*கோளூர்*.