புற்களைக் கண்டால் அவற்றின் தலைகளைத் தடவி
அவற்றுடன் பேச
பிரியப்படுவேன்!
கொழுகொம்பைத் தழுவிப் பின்னிப்பிணைந்து
வளர்ந்திருக்கும்
கொடிகளைக்' கண்டால் செல்லமாய் அவற்றை வருடியவாறே இரகசியமாய் அவற்றுடன் பேச
பிரியப்படுவேன்!
பூக்கள் மலர்ந்திருக்கும்
சிறுசெடிகளைக்
காணும்போதெல்லாம்
பாசத்துடன் தொட்டுதொட்டு கண்களால் ரசித்துரசித்துப் பேசப் பிரியப்படுவேன்!
கம்பீரமாய் உயர்ந்து
நிமிர்ந்து நின்றிருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களைக்
கண்டால் சல்யூட் அடித்து பிறகு அவற்றின் நலம்விசாரிக்கப் பிரியப்படுவேன்!
அடிபெருத்த வயதான பெரியமரங்களைக் கண்டால்
அவற்றை இருகரங்களால் சுற்றிவளைத்து அணைத்தப்படியே
பேசப் பிரியப்படுவேன்!
படர்ந்திருக்கும் ஆலமரம் என்றாலோ அருகில் சென்று தொங்கிடும் விழுதெல்லாம் கணக்கிட்டு ஒவ்வொன்றிடமும்
நலம்விசாரிக்கப் பிரியப்படுவேன்!
மரத்தாலான நாற்காலி மேசைகளைக் கண்டால் யாரும் அறியாவண்ணம்
இரகசியமாய் அவற்றிடம் எந்த மரத்திலிருந்து உருவாகி வந்தீர்கள் என் செல்லங்களே எனக்கேட்கப் பிரியப்படுவேன்!
*த.ஹேமாவதி*
*கோளூர்*