குயவன் வனைந்திட்டப் பானையே!
நானும்கூட
உன்னைப் போல்
இறைவனால் வனைந்திட்டப் பானைதான்!
பானையே
பக்குவமாய் ஆக்கப்பட்டு நீ
வாங்குவோரின் இல்லத்துக்குச் செல்லப்படுவதைப் போலவே
நானும் வாக்கப்பட்டு கணவனின் இல்லத்திற்குச் சென்றேன்!
சென்றவிடந்தனிலே
உன்னுள் நீர் சுமந்தாய்!
அரிசி சுமந்தாய்!
பால் சுமந்தாய்!
பிறவிப் பயன்பெற்றாய்!
மேலும் பானையே
நீ நிரம்பிப் பேர் பெற்றாய்!
நீர்ப் பானை
மோர்ப் பானை
பால் பானை என்று!
ஆனால் பானையே
ஆண்டுகள் பலவாகியும் இன்னும் நிரம்பாத பானையாய்
ஒருபிள்ளையும் சுமக்காத வயிறோடு இருக்கிறேன்!தேகத்தில் உடையாத பானை நான்!
மனதோ சுக்குநூறாய் உடைந்துவிட்ட பானை!
ஊர்உலகம் எனக்கிட்ட பெயரோ
பிள்ளையிலா மலடி!
சொல் பானையே!
நான் எப்போது உன்போல நிரப்பப் பட்ட பானையாவேன்?
அல்லது நிரம்பாமலேயே உடைந்துப் போவேனோ?குயவனாம் ஆண்டவனின் பதில் என்னவோ இதற்கு?
த.ஹேமாவதி
கோளூர்
(பிள்ளைவரம் வேண்டி நிற்கும் தாய்மார்களைப் பானையோடு ஒப்பிட்டு எழுதினேன்)