(ஏனோ தெரியவில்லை எனக்கு விரல்களின்மீது கவிநாட்டமாக இருக்கிறது)
விரற்காப்பியம்
காதல்வயப்பட்ட
தலைவன் தலைவியைப்
பற்றி பாடப்படுவது காப்பியம்!
இங்குநான் பாடமுனைவதோ
அவ்விருவரின்
விரல்களைப் பற்றிய விரற்காப்பியம்!
காதலில் விழிகளுக்கெவ்வளவு
முக்கியத்துவமோ
அதேஅளவு விரல்களுக்கும் உண்டு!
இருவரும் காதலால்
ஒருவரே என்றாலும்
விரல்களுக்கிடையே
பேதங்கள் உண்டு!
அவளின் விரல்கள்
மெல்லினம் அவனுக்கு!
அவளுக்கோ அவனின் விரல்கள்
வல்லினம்!
ஒற்றுமையும் உண்டு!
இருவரின் விரல்முனைகள் ஒவ்வொன்றும் சக்திவாய்ந்த அணுமின்உலைகள்!
தலைவனின் விரலோ பூ போன்ற தலைவியின் விரலைப் பற்றிடத் துடிக்கும் மோகத்தால்!
தலைவியின் விரலோ பற்றவரும் விரலைத் தள்ளிடமுயலும் நாணத்தால்!
வாய்ச்சொற்கள்
தோற்றுப் போனால் விழிமொழி!
விழிமொழியும் தோற்றுப்போனால்
விரல்மொழியே
காதலர்க்கு கதி!
விழிகளின் சங்கமத்தில்
நாணத்தின்வசமான
தலைவியின் சிவந்தமுகம்தனை
காதலன் காணாவண்ணம்
அவளின் பூவிரல்கள் பத்தும்
பட்டும்படாமலும்
தொட்டும்தொடாமலும்
திரையாக மூடிக்கொள்ளும்!
அவ்வமயம் விரலிடைத் தெரியும் அவளின் மலர்முகம் கண்டு
தலைவனின் உள்ளமோ ஆனந்தத்தால் விம்மும்!
மலரிதுவோ எனதலைவனை மயங்கவைத்த தலைவியின் விரல்கள் வாழ்க!
எத்துணை வல்லமை இவன்விரல்கள் என தலைவியை வியக்கவைத்த தலைவனின் விரல்கள் வாழ்க!
(விரற்காப்பியம் நிறைவுற்றது)
த.ஹேமாவதி
கோளூர்