Header Ads Widget

Responsive Advertisement

உயர்ந்த விரல்கள்



நான் புறவுலகு காணும்முன்பே

கருவறையில்

நானிருக்கையிலே

வயிற்றைத்

தடவிதடவி என்வளர்ச்சியின்

அதிகரிப்பால்

மகிழ்ச்சியில்

என்தாயை திளைக்கவைத்த 

அவளின் விரல்கள்!


பிறந்ததும்

தன்முலைதனைப்

பிடித்து

என்வாய்தனில்

புகுத்தி

அமுதாம் தாய்ப்பால்

புகட்டிய என்தாயின் விரல்கள்!


சிறிதும்

முகஞ்சுழியாமல்

என்னைக்

குளிப்பாட்டி

தூய்மைப்படுத்தி

பணிவிடை செய்த

என்தாயின் விரல்கள்!


முதலடி நடக்கையில்

என்விரல்தனைப்

பற்றி விழாமல்

நான் நடந்திட

பயிற்றுவித்த

என்தாயின் விரல்கள்!


பள்ளியில்

சேர்க்கும்முன்னரே

என்விரல் பிடித்து

நெல்லில்

அகரம் எழுதவைத்த

என்தாயின் விரல்கள்!


நிலாவின் ஒளிதனை மங்கச்செய்யும்

முகவொளியாலே

என்னைக் கவர்ந்தே

பாற்சோறுதனை

என்வாயில்

ஊட்டிய என்தாயின்

விரல்கள்!

காய்ச்சலின்போது

என்நெற்றியின்மீது

தடவிதடவி

தொடுகைச்சுகத்தால்

நலந்தந்த என்தாயின் விரல்கள்!

என்தலையை வாரி

பின்னல்பின்னி

பூவினைச் சூட்டி

அழகு பார்த்த

என்தாயின் விரல்கள்!

இதோ இந்நாள்வரையிலும்

என்மீது அன்புகொண்டு

என்கைவிரல் பற்றி

என்சுகம் பற்றி

விசாரிக்கும் என்தாயின் விரல்கள்!


இந்தவிரல்களே

எனக்கு எப்போதும்

உயர்வான விரல்கள்!


த.ஹேமாவதி

கோளூர்