இராத்திரி முழுக்க
குடிகார அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் துட்டுச் சண்ட!
அழுத தம்பியையும்
தங்கச்சியையும் ஆதரவா அணைச்சி
சாப்பிடவச்சி தூங்கவைத்து ஆத்தாள சமாதானப் படுத்தி
அப்பன கட்டிலில
சாய்ச்சு படுக்கவிட்டு எப்போது தூங்கினோம் எனத்தெரியாம கண்ணுறங்கி
கருக்கலிலே எழுந்து தொழுவத்தக் கழுவி
மாடுகன்னு ரெண்டையும் குளிப்பாட்டிய பிறகு
வாசலிலே பெருக்கி
சாணத்தால மெழுகி இழைஇழையா கோலத்தைப் போட்டு
ஆத்தாளுக்கு ஒத்தாசையா பாத்திரங்களத் துலக்கி கொதிக்கிற உலையில அரிசிய கழுவி போட்டு
ராவெல்லாம் சாராயத்தோடு குடித்தனம் நடத்திக் களச்சிப் போன அப்பனுக்கு உடம்புக்கு இதமா
பானைநிரம்ப நீரூற்றிப் பக்குவமா சூடாக்கி தட்டியெழுப்பி குளிக்கவைத்து குளிக்கையிலே அழுக்குப் போக முதுகைத் தேய்ச்சிவிட்டு
அதுக்குள்ள சமயலமுடிச்சுட்டேன் அடுப்படிய பாத்துக்கடி என்றபடி
வயக்காட்டு வேலைக்கு ஆத்தா கிளம்பிவிட
நாலாப்பு படிக்கிற தம்பியும்
ரெண்டாப்புப் படிக்கிற தங்கச்சியும் எழுந்துக் கொல்லைப்பக்கம் போய்வர காத்திருந்து இருவரையும் குளிக்கவைத்து தலைசீவி சீருடயப் போட்டுவிட்டு
ஆத்தா ஆக்கிய கஞ்சியக் குடிக்கச்செய்து பக்கத்தெருவிலுள்ள
ஊராட்சித் தொடக்கப்பள்ளிக்கு
அனுப்பி விட்டு
துவைத்து மடித்துவைத்த வெள்ளைவேட்டிதனை
அப்பனைக் கட்டவைத்து சட்டியில இருக்கிற பழையசோற்றில அளவா உப்புசேர்த்து ஒரப்பா ஊறுகாயத் தொட்டுக்கவிட்டு
சைக்கிளிலே பக்கத்து டவுனிலே கம்பெனி வேலைக்குப் போகவிட்டு
அல்லாரும் போனதும் கடகடன்னு வீட்டப் பெருக்கி
அவிழ்த்த துணியெல்லாம் கிணத்தடியில் தோய்த்து காயவிட்டு அப்பன் மீத்திவிட்ட பழஞ்சோற்றை அள்ளிஉண்டு ஆத்தா சமச்சிவிட்ட புளிக்குழம்பு சாதத்தை டப்பாவில் எடுத்துக்கொண்டு அவசர அவசரமா தலையப் பின்னி
பத்து கிலோமீட்டர் தூரத்துல உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்குச் செல்லும்
பேருந்து பிடிக்க ஓடோடிச் செல்லும் சமயம்
மற்ற மாணவிகளும்
சேர முகமெல்லாம் மத்தாப்பாய் மலரும்!
பள்ளிக்கூடம் போனதும் வகுப்பறைக்குள் நுழைந்ததும் கணக்கு டீச்சர்
முதலில் வந்து
வீட்டுக்கணக்கு செய்யாதவர்கள் எழுந்து நில்லு எனச்சொல்ல நிற்கும் கூட்டத்தில்
எழுந்து நிற்கையில
டீச்சர் கேப்பாங்க
இராத்திரியில போடலையா?இல்லாட்டி வெள்ளம எழுந்து என்னபண்ண ?
வெட்டியா விளயாடினாயா?
நாளைக்கு உன் பேரண்ட்ஸை அழைத்துவா! எனச் சொல்கையில கண்ணுமொன ரெண்டுல கண்ணீர் முட்டிக்கொண்டு வருமே!
அவள்தான் அரசுபள்ளி மாணவி!
த.ஹேமாவதி
கோளூர்