முள்ளின் நுனியிலும்
துளிகூட பயமின்றி விழுகிறது
மழைத்துளி.
☆
தண்டவாளத்தின் மீது
ராட்சத மரவட்டை
தொடர் வண்டி.
☆
பீர்க்கை நெரிஞ்சில் பூக்களில்
பூத்திருக்கிறது பொன்னிற
பனித்துளிகள்.
☆
கிளறி விடத்தான் செய்கிறது மழை
மண் வாசனையை மட்டுமல்ல
மனதின் வாசனைகளையும்.
☆
நல்ல மழை
சாயம் போகவில்லை
செடிகளின் பச்சை.
☆
பெருமழை
என்ன செய்யும்
கதவில்லா கூட்டுக் குருவிகள்.
☆
மழையோ வெயிலோ
பதற்றமேதுமில்லை
நத்தையின் நகர்வில்.