Header Ads Widget

Responsive Advertisement

சொந்தங்களைத் தேடி




'மண்தேடி அலைகின்றன வேர்கள்' 

என்று தானே எண்ணினீர்கள் நீங்கள்,

தவறென்று மறுக்கமாட்டேன் அதை நான்.

ஆனாலும் நண்பர்களே அதுவல்ல உண்மை,

மண்தேடும் போர்வையில் நான் தேடி அலைந்தது பிரிந்து போன என் இனிய சொந்தங்களை.

நம்பமுடியவில்லை உங்களால் சரி தானே நான் சொல்வது?


என் வேர்கள் மண்ணுக்குள் பத்திரமாய் இருக்கிறது, 

பத்திரமாய் இருந்ததனால்  உற்றவரை மறந்துவிட்டேன்,

எங்குதான் சென்றார்கள் என்றுகூடப் பார்க்கவில்லை.

தனிமை என்னை வாட்டிவிட, மனமதோ தளர்ந்துவிட பிரிந்து சென்ற சொந்தங்கள் எங்கே தான் சென்றார்கள்? என்றே நான் தேடுகின்றேன்,

தேடிச்சென்ற என் கிளைவேரை நீங்களும் பார்த்து நின்றீர்.


'கண்கெட்ட பின்னே சூரியனைத் தேடுவர் மானிடர்'

என்று நானும் கேட்டிருந்தேன்.

மனிதர்களைச் சார்ந்து தானே  இருக்கின்றேன் நான் இன்று,

அதனால் தான் நானும் மாறிவிட்டேன் மனிதரைப்போல்,

சொந்தத்தையெல்லாம் இழந்த பின்னே இன்று

தேடுகின்றேன் சொந்தங்களை 

நானும் மனிதர்களைப் போன்று.


*சுலீ அனில் குமார்

*கே எல் கே கும்முடிப்பூண்டி.