மண் நிறைந்து புதர் மண்டி
வெள்ளம் வர வழியின்றி
நீர் நிரம்ப இடமின்றி
நீர்நிலையைப் போலன்றி
நிலம் போன்று தான் தோன்றி
நிற்கின்ற நீர் நிலையை
தூர் வாரி மண் தோண்டி
குளம் குட்டை ஏரி பேணல்
நீர் நிலையின் நல் விடியல்.
நெகிழிகளால் மண்மூடி
நீர் இறங்க வழிதேடி
வழியின்றி நீர் ஓடி
சேர ஓர் இடம் நாடி
நிலத்தடி நீர் கீழ் ஓடி
நலன் நாடும் உளம் கூடி
நெகிழிக்கு தடை தேடி
நிற்கின்ற நன்னாளே
பூமித்தாய் தன் விடியல்.
ஆளுக்கோர் மரம் நட்டு
மரம் வளர நீர்விட்டு
வனம் வளர பாடுபட்டு
விலங்குகளை வாழவிட்டு
பசுமையை வளரவிட்டு
பூமியைக் குளிரவிட்டு
உயிர்க் காற்றைப் பரவவிட்டு
வான்மழையைப் பொழியவிட்டால்
மனிதனுக்கு நல் விடியல்.
மதங்களை மறந்து விட்டு
இனங்களை ஒதுக்கிவிட்டு
சாதியைத் தவிர்த்து விட்டு
மொழிகளை வாழவிட்டு
ஏற்றத் தாழ்வை ஒழித்துவிட்டு
எளியோரைத் தூக்கிவிட்டு
எதிரிகளை நீக்கிவிட்டு
வல்லரசாகி விட்டால்
தேசத்தின் நல் விடியல்.
இந்த தேசமே எதிர்நோக்கும் விடியல்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்மிடிப்பூண்டி.*