Header Ads Widget

Responsive Advertisement

அன்புத் தந்தைக்கு நான்எழுதும் கடிதம்!

எங்களைவிட்டுப் பிரிந்து ஓராண்டு

சென்றதப்பா!

உங்கள் நினைவுகளே நெஞ்சில் ஓராயிரம்

பொங்குதப்பா!

கம்பீரமான உன்னழகு கண்ணைவிட்டு

போகலைப்பா!தாமரையை விஞ்சும் உன்முகமோ நித்தமும் தெரியுதப்பா!முகமலர்த்தி எமைநோக்கி நீசிந்தும் புன்னகையோ என்னிதயத்தில் பசுமையாய் உள்ளதப்பா!

கோலாரில் நீபிறந்து ஆனைமல்லூரில் நீவளர்ந்து பாரிமுனையிலே வங்கிப்பணியாற்றி

தங்கக்குணத்தாலே

எங்கள் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தாய்!

என்விரல்பிடித்தே

நீசொல்லித் தந்த

ஓவியக்கலையும்

கையெழுத்துக் கலையும்

இதோ பிரியாமல்

என்னிடமே இருக்க

நீமட்டும் பிரிந்துச்

சென்றுவிட்டாயே அப்பா!

நீ கைபிடித்துச் சென்று காட்டிய இடங்களெல்லாம்

இன்றும் நான்

சென்று பார்க்கையிலே கூடவே நீயும் என்னுடனே இருப்பதாகத் தோன்றுமப்பா!

களிமண்ணைப் பார்த்தால் நீஎனக்காக செய்த

சொப்புகள் கண்முன்னே தெரியுமப்பா!

இன்று என்மாணவர்களின்

தேர்ச்சி அட்டைகளை நிரப்புகையில் என்தேர்ச்சி அட்டையிலே கையெழுத்திடுகையிலே

என்னைப் பாராட்டிப் பேசிய பேச்செல்லாம்  என்செவியில் கேட்குமப்பா!

நான்வரைந்து நீரசித்த ஓவியங்களை இன்றும் எடுத்துப் பார்க்கையிலே

நீயே நேரில் பாராட்டுவதுபோல் இருக்குமப்பா!

எனது  வலக்கையில் அறுவைசிகிச்சைத் தழும்பைப் பார்க்கும்போதெல்லாம்

மருத்துவமனையில்

என்னுடனே நீயிருந்து அன்பாய் கவனித்தது நினைவில்வர கண்ணிரண்டில் நீர்வந்து முட்டுதப்பா! இனி

எட்டுப் பிறவியெடுத்தாலும்

என்னப்பா நீயாகவே இருக்கவேண்டுமப்பா!

இதுவே என்பிரார்த்தனையப்பா!


த.ஹேமாவதி

கோளூர்