இப்படித்தான் வாழவேண்டும்,
மூத்தோர் சொற்படித்தான் நடக்க வேண்டும்,
நீதியோடு நேர்மைவேண்டும்,
நல் ஒழுக்கமதைப் பேணவேண்டும்,
கண்ணியத்தில் கருத்து வேண்டும்,
நாட்டின் கலாச்சாரம் காக்கவேண்டும்
சொல்லிச் சென்ற தலைமுறைகள்
உணர்ந்து வாழ்ந்த தொடர்முறைகள்
பாரதத்தின் அஸ்திவாரம்
பார் வியந்த அஸ்திவாரம்
ஆடவைக்கத் துணிந்து சிலர்
ஆட்டிவிட்ட அஸ்திவாரம்.
உண்ணுவதில், உறங்குவதில், பேசுவதில், பழகுவதில்
இப்படித்தான் என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது;
கட்டுப்பாட்டை அடிமைத்தனம் என்ற வார்த்தை வென்றது;
தன்விருப்பம், தன்செயலே சுதந்திரமாய் ஆனது;
சுதந்திரம் என்ற வார்த்தை கூடப் புதிய பொருள் கொண்டது.
நாகரீகம் நகருக்குள் நகர்ந்து நகர்ந்து வந்தது
நல்லதெல்லாம் அல்லதென்ற காட்சி எங்கும் நிறைந்தது
கலாச்சாரம் களையிழந்து மூடநம்பிக்கையானது
பெரியோர் சொல் வார்த்தையெல்லாம்
பெருமையற்றுப் போனது
உரிமை என்ற பெயரில் பல அத்துமீறல் தொடர்ந்தது
கடமை என்ற எண்ணம் வெறும் கடனுக்காய் ஆனது
'அசைகிறது ஓர் அஸ்திவாரம்'
என்று உணராமல் போனது,
தேசம் உணராமல் போனது.
சுலீ. அனில் குமார்