அலைகடல் உன்னை அழைக்கிறது விளையாட வா வா!
மலையடிவாரம்
மன்றாடுகிறது என்னருகே வந்து ஓய்வெடுத்துச் செல் என்றே அழைக்கிறது!
கலைகள் அறுபத்துநான்கும் உன்அறிவுக்கு ஆக்கம்தர காத்திருக்கிறது!
விலையிலா செல்வமாய் காட்சித்தரும் இயற்கை கண்ணுக்கு விருந்துண்ண உன்னை அழைக்கிறது வா வாவென!
ஆனால் நீயோ
உலையில் போட்ட அரிசியாய்
வலைத்தளத்துள் அகப்பட்டுக் கொண்டாயே!
நவீன அலைபேசியே
வாழ்வின் ஆதாரமெனக் கருதுகிறாய்!
விலைகொடுத்து வாங்கிய அலைபேசிக்குள்
காணாமல் போகிறாய்!
இறந்து ஆறடிக்குள் புதைவதற்குமுன்
உயிரோடு இருக்கையிலே
ஓரடி அலைபேசிக்குள்
புதைந்துப் போகிறாய்!
இறந்ததால் ஆறடிக்குள் அடங்குபவன் உயிரோடு இருக்கையிலேயே
உயிரிருந்தும் உணர்வுகளால் இறக்கிறான் அலைபேசியால்!
எட்டுக்கால் சிலந்தியாய் இன்று
எட்டுத்திசையிலும்
வலைத்தளம் விரித்த வலைக்குள்ளே அத்தனை மனிதர்களும் அகப்பட்டுக் கிடக்கின்றனர்!
வலைத்தளத்தில் சிக்கிய பூச்சிகளாய்
வாழ்வின் பொருளை இழந்தவர்கள் இவர்கள்!
வலைத்தள வரவால் எத்தனையெத்தனை
இழப்புகள் மனிதர்க்கு!
பக்கத்தே இருந்தும் குடும்பத்தாரிடம் பேசுவதை இழந்தான்!
உறவுக்கும் நட்புக்கும் பாலமாக இருந்த கடிதம் எழுதும் திறமையை
மறந்தே போனான்!
தன்னையொத்த நண்பர்களிடையே விளையாடும் மகிழ்ச்சியைத் தொலைத்தான்!
மனிதரிடையே பழகும்விதத்தை
பறக்கவிட்டுவிட்டான்!
தனக்குத்தானே
விலங்கிட்டு தனிமைச்சிறைக்குள்
அகப்பட்டுக் கொண்டான்!
விட்டில் பூச்சியாய்
ஆகிவிட்டான்.
த.ஹே
கோளூர்