அழவைத்துப் பிறந்தாலும்
அழுது கொண்டே பிறந்தாலும்
அழுகை நிறுத்தப் பிறந்தவளாய்
அழகோடு பிறந்தாய்.
வறுமையிலே தவித்தாலும்
வலியினிலே துடித்தாலும்
கிலி வந்து முறைத்தாலும்
ஆறுதலாய் வந்தாய்.
அழுகின்ற உனைப்பார்த்து
அனைவருமே மகிழ்ந்தாலும்
பயமது விலகாது மேலும் நீ அழுதாய்.
பெற்றவளை நீ அறிந்து
உற்றவரை நீ உணர்ந்து
தயக்கமதை விலக்கிவிட்டு
புன்னகை நீ புரிந்தாய்.
பெற்றவரின் மனம் நிறைய
சுற்றியவர் உளம் மகிழ
சற்றே உன் இதழ் விரித்து
புன்னகையில் மலர்ந்தாய்.
பொன்னகையைத் தோற்கடித்து
கன்னத்தின் அழகு கூட்டி
உளம் குளிர மனம் மகிழ
வந்ததந்தப் புன்னகை.
ஜன்மங்கள் கடந்தாலும்
வன்மங்கள் வளர்ந்தாலும்
எண்ணத்தில் மறையாமல்
என்றுமந்தப் புன்னகை.
மனக்கவலை தீர்க்கவந்த மழலை உந்தன் புன்னகை
மறக்கவே முடியாத வரம் உந்தன் புன்னகை.
சுலீ. அனில் குமார்