தேடிவந்த விடியலுக்குள் ஓடிஒளியும் வண்ணநிலவு
நாடிவரும் திங்களுக்காய் நன்றென வந்திடுமா
பாடிவரும் பாட்டுக்குள் பாலகனை உள்நிறுத்தி
கூடிவரும் வரவாகி கொலுவேறி நிற்கிறதா...
மூடாத கிணற்றுக்குள் மூர்ச்சையான அரும்பதனை
வாடாத மலராக்கி வாழ்வுக்குள் வரவாக்க
தேடாத மனங்கள் கூட தெய்வமதை வேண்டிநிற்க
சாடாத மனிதமிங்கே மகிழ்வாக தெரிகிறதே..
திங்களென வந்துவிடும் தீதகற்றும் விடியலே நீ
அங்கமது மலர்ந்தபடி மதிமுகத்தை மறைத்தாயோ
பொங்குமனம் பூத்திடவே புலர்கின்ற பொழுதாகி
தங்கமென வெளிச்சத்தைத் தந்திடவே வந்தாயோ..
நாடெங்கும் ஓர் முழக்கம் நல்லதே நடக்க வேண்டி
வீடெங்கும் எதிர்பார்ப்பு வெளிச்சம் வரவேண்டி
நாடாளும் சக்கரமும் நன்றாக சுற்றிடவே
ஆடாத மனத்துள்ளே அரும்பைக் காத்திடவே..
ஐயிரண்டு திங்களென அடிவயிறு சுமந்தவளும்
கையிரண்டை பிசைந்தபடி கண்ணீரால் குளித்திருக்க
மெய்யான வாழ்வுக்குள் உயிர்மெய்யைக்
கொண்டிடவே
மையிருண்ட மனமாகி கனமான சிந்தையோடு..
வாய்திறந்த கிணறெல்லாம் வாழுமுயிர் விழுங்கிட்டால்
தேய்பிறையின் முடிவான திங்களே நீ உணர்வாயோ
சேய் நுழைந்த சோகமதை செரித்திடவே முடியாமல்
மாயமிகு வாழ்வுக்கு மண்டியிட்ட இவள் அன்னை..
யாராலே இச் சோகம் நடந்தது அறிவாயா
ஓர் அடைப்பு செய்திருந்தால்.. உயிர் பதைப்பு இருக்காதே
ஓர்உயிரை உயிராக்க உணர்வாகி பல உயிர்கள்
இராப்பகலாய் தவிக்கிறதே.. தன்குடும்பம் மறந்தபடி..
நிர்வாகச் சக்கரங்கள் நிமிர்ந்தே நின்றாலும்
தலைகுனிந்து பார்த்திடலாம் தரைக்குள்ளே ஓட்டைகளை
விலையில்லா உயிரடக்கும் விபரீத ஓட்டைகளை
நிலையான சட்டத்தால் நிரப்பிட்டால் உத்தமமே..
பரணி சுப.சேகர்