சோளக்கதிர் அறுத்த சுமை
பாரமான காரணத்தால்
சின்னவனை வழி நடத்தினையோ?
சின்னவனைக்கைமாற்ற
தாமதித்தச்சிறு கணத்தை
விதி முந்தி ஆழ்துளையில் தள்ளியதோ?
பத்தடியில் வீழ்ந்த மகன்
கையிரண்டை மேல் தூக்கி
பரமனையோ வேண்டுகிறான்?
பரிதவிக்கும் தாய்க்கு
தன்னம்பிக்கையை ஊட்டுகிறான்!
“சாமி அம்மா இங்கனத்தேன்
இருக்குறேன் பயப்படாதே தங்கம்”
எனும் தாயின் குரலுக்கு
ஒற்றைவார்த்தையில்
உயிர் தருகின்றான்” சரி” என்றே!
பத்து மாதம் காரிருளில் கனவாய்
பார்த்ததையெல்லாம் மறுமுறை
மீள்பார்வை செய்கிறாயோ மகனே?
மீண்டு வா ஆயிரம் விடயமுண்டு
உன்னிடம் கதைகதையாய்
உன் தாயுனக்கு கூறி சிரித்திட!
ஆயத்த உடை வாங்கி அதை
ஆங்காங்கே பிரிக்கவும்
பிடித்துத்தைக்கவும் மனமின்றிஉனக்கு
பிடித்தபடி தைத்துப்போட்டு.....
ராசாக்கணக்கா வீதியிலே
நடந்து போகப் பார்த்தகண்ணு
உன்மேல் பதிஞ்சிடாம தானிருக்க
கண்ணேறு கழிச்சிடுவேன்.....
கண்மணியே மீண்டுநீயும் வந்துவிடு!
அம்பானி வீட்டுல நீ பொறந்திருந்த
அரைமணிநேரத்துல மீண்டிருப்ப!
ஏழவீட்டுல பூத்ததால
எளந்தளிரே நீ பொந்துக்குள்ள
ஏங்கியழுதே நின்னிருக்க!
பார்த்தவுக மனம் பதறி
கையெடுத்து கும்பிடுறாங்க!
கடவுளரும் அதக்கண்டுகலங்குறாங்க!
சாதிமதமிங்கே செத்து போச்சு!- இத
சாதிச்ச புள்ளைக்கிது பெருமையாச்சு!
பெத்தவயிறு குளிரணுமே அதுக்கு
பெரியகடவுள் மனமிறங்கணுமே!
ஊர்கூடி தேரிழுக்க இங்கு வரல
பேர்பாடிசெய்யும் பிரார்த்தனைக்கோ
முடிவேயில்ல!
பச்சமண்ண மண்மாதாவே தந்துவிடு!
பிச்சையாவே ஏத்துக்கிறேன்
மனசு கொஞ்சம் இறங்கி விடு!
நம்பிக்கைய நட்டுவச்சி
காத்திருக்கிறோம் .......
மடிப்பிச்சையா நீ மகன
மீட்டுத்தர வேண்டிநிக்குறோம்!
மகன் வரவு கண்ட பின்னேதான்
எங்கள் இல்லங்களில்தீபாவளி
எங்களுக்கு உதவிட
இறங்கிவரும் தெய்வமே
போற்றி பாடிடுவோம் நாமாவளி!
🙏🙏வத்சலா🙏🙏