எழுத்துப்
பிழைக்கொரு தாள்
வார்த்தை
மாற்றுக்கொரு தாள்
வரி வடிவ
அமைப்புக்கொன்று
எதுகை மோனை
சொல் நயம்
பொருள் நயம்
எல்லாவற்றுக்கும்
ஒவ்வொன்றென
எத்தனை தாள்களை
எழுதிக் கிழிப்பது
கடைசியாய்
கையெழுத்து
அழகில்லையென்ற
முடிவுக்கு ஒன்று
என படுக்கை
அறையை
குப்பைத்தொட்டியாக்கி
இறுதியில்
ஒரு தாளை
இருப்புக்கட்டி
மறுநாள் உன்
கைக்கு
மாற்றுவதற்குள்
எழுதிய கவிதை
எதுகை மாறி
மோனை மாறி
ஏன் பொருளே கூட
மாறும் அளவு
மார்படைத்துப் போன
நிமிடங்களை
நினைத்துப் பார்க்கிறேன்
எத்தனை முறை
வேண்டுமெனினும்
எழுதி அழிக்கலாம்
அழித்து எழுதலாம்
என்கின்ற இந்த
அறிவியல் கருவயில்
எண்ணங்களை
கவிதைகளாக்கும் போது...