பெரிதாக வசதிகள் எதுவும் அங்கு இல்லை,
பெரிய பெரிய அறைகளும் திரைகளும் இல்லை,
பெருமை பேசும் அளவுக்கு பெரியவீடுமில்லை,
அரிய அரிய பொருள்கள் என்று சொல்ல எதுவுமில்லை.
பெரிதாக நான் மதித்த உறவுகள் இருந்தது,
பெரிய பெரிய கனவுகளை எனக்களித்து மகிழ்ந்தது,
பெருமையுடன் பிள்ளைகளின் உயர்வினைப் பார்த்தது,
அரிதாய் இன்று மாறிவிட்ட அன்பு நிறைந்திருந்தது.
இன்று உண்ணும் ஒருபங்கு
ஐந்து பங்காய் இருந்தது,
உறவுகளின் வருகை அதை ஆறேழாய்ப் பகிர்ந்தது,
இருந்தாலும் மனமும் வயிறும் ஒருசேர நிறைந்தது,
உறவு விலகிப் போகையிலே மனது பாரம் கொண்டது.
மின்விசிறி தேவையில்லை தூக்கம் வந்து அழைத்தது,
அன்னைமடி சுகத்தினிலே பஞ்சுமெத்தை தோற்றது,
என்னென்னவோ புதுவசதி சென்னை வாழ்க்கை தந்தது,
அன்னை இல்ல நிம்மதியை
தர ஏனோ மறுத்தது.
அன்னை இல்ல வாழ்க்கைக்காய்
இன்னும் மனது ஏங்குது.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*