Header Ads Widget

Responsive Advertisement

நம் வசந்த காலம்


ஒருமர நிழலில் ஒரு குடை கீழில் 

ஈருடலும் ஓருயிராய் நாம் இருந்த காலம்;


ஒரு இளநீர் வாங்கி இரு குழல் போட்டு 

ஒருசேர நாம் குடித்த நம் கடந்தகாலம்;


பூக்களில் தேன்வண்டு தேன்பருக அமர 

புரிதலோடு நம் கண்கள் சந்தித்த காலம்;


உன்குரலில் நான் மயங்கி உன் வார்த்தை கேளாமல் உன்முகத்தை எனை மறந்து பார்த்திருந்த காலம்;


உன் சுவாசம் என் மூச்சாய் என் வார்த்தை உன் குரலாய்

நம்பிக்கை விலகாமல் நாம் இருந்த காலம்;


உன் அன்னை என் அன்னை என் தந்தை உன் தந்தை

என்று நாமும் உறவு சொல்லி மகிழ்ந்திருந்த காலம்;


உன் உணவை நான் உண்டு என் உணவை நீ உண்டு

அன்னையரை நாம் புகழ்ந்து களித்திருந்த காலம்;


உயிர் மூச்சே நீ என்று நான் சொன்ன மொழி கேட்டு என் மூக்கை நீ பொத்தி சோதித்த காலம்;


நிழல் வடிவில் இணைந்திருந்து நிஜவடிவில் பிரிந்திருந்து 

நினைவலையில் நாம் குளித்து காத்திருந்த காலம்;


நனைந்திருந்த என் தலையைத் தாவணியால் நீ துவட்டி 

கலைந்திருந்த உன்குழலை கைவிரலால் நான் கோதி 

பிரிவதற்கு மனமின்றி அமர்ந்திருந்த காலம்;


உனக்கு நான் எனக்கு நீ பிரிவில்லை ஒருபோதும் என்று சொல்லி நமை நாமே நாம் தேற்றிய காலம்;


மறக்கத்தான் நினைத்தாலும் மறக்கவே முடியாமல் மறுபடியும் மறுபடியும் நினைவில் வரும் காலம்;


மருதாணிக்கைபோலே மனங்கவர்ந்து நிற்கின்ற 

மலைக் காற்றாய் குளிர்விக்கும் நம் வசந்த காலம்,

நம் வசந்த காலம்.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி*