காதலில்லா உலகேது?
அந்த காதலிலே
உயர்ந்ததெது?
மண்ணுக்கும் உழவனுக்கும் இடையே உள்ளதே உயர்ந்த காதலாகும்!
உழவனின் காலடிப் பட்டாலே போதும் சிலிர்த்திடுவாள் நிலமங்கை!இது உழவனுக்கும் மண்ணுக்கும் மட்டுமே புரிகின்ற மண்ணின் அகத்திணை!
மண்பார்த்து உழவன் சிரிக்க
உழவன் காலடிபட்ட
மண்ணோ நெகிழ
காதல் மலரும்!
ஏர்முனையாலே காதலிக்கு சலியாது காதல்மடல் தீட்டிடுவான் கற்காத உழவன்!
நீராட்டி காதலியை குளிரப்படுத்தி
விதைநெல்களை விருந்தாகத் தந்திடுவான்!காதலியின் மேனிமுழுக்க பச்சைவண்ணப் பட்டுச்சேலையைப் போர்த்திடுவான்!மண்ணென்ற பெண்ணுக்கு உழவன் தாய்மைப்பேற்றினை அளித்திடுவான்!
யார்யாரோ மண்மீது நடந்தாலும் காதலனாம் உழவனின் நடையைத் தனித்து அறிவாள் நிலமங்கை!சத்தமே இன்றி உழவனும் அவளும் பேசும் உரையாடல்கள் ஏராளம்!ஆதலினால் சொல்கிறேன் இவ்வுலகில் *உயர்ந்த காதல்*
உழவன் மண்ணின்மேல் வைத்த காதலே!
த.ஹேமாவதி
கோளூர்