என் அத்தானின் மூச்சுக் காற்று என்மீது பட்டு எத்தனையோ நாளாச்சு!
தேசத்தின் எல்லையிலே பகைவரின் தாக்குதலை முறியடிக்கத் தயாராக நின்றிருக்கும் இராணுவ வீரர் அவர்!
பனியின் கொடுங்குளிரில் அவர் அங்கிருக்க அவர்மனைவி நானோ
அவர்கட்டிய வீட்டுக்குள் பஞ்சுமெத்தைமீது
கதகதப்பாய் படுத்திருக்கேன்!
என்மூச்சுக் காற்றே
நீகொஞ்சம் வேகமாய் என்அத்தான் இருக்குமிடம் தேடி அவரைச் சூழ்ந்து கதகதப்பைத் தருவாயா?அப்படியே சட்டெனத் திரும்பி விடாமல்
நான்கூட அவரைப்போல் போர்க்களத்தின் முனையில்தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தி விடுகிறாயா?
பிரிவென்ற ஈட்டிகள் பலமாய்த் தாக்கிட
நெஞ்சுரத்தின் பலத்தால் தாங்கும் கதை சொல்வாயா?
இளமைக்குத் துணையாக என்னுடன் இருக்கவேண்டியவன்
பனிச்சிகரத்தில் தனியாக இருக்கிறானே!
குளிரோடு போராடும் அவன்தேகம் படும்துயரத்தை என்மூச்சுக் காற்றே நீசென்று போக்கவேண்டும்!
தாய்மண்ணைக் காக்கும் அவனுக்கு
என்மூச்சுக் காற்றே நீ விரைந்து சென்று அவனை அணைத்து வெப்பமூட்ட வேண்டும்!அப்படியே திரும்புகையில் நான் ஒருத்தி இருப்பதை நினைவூட்டி அவன்மூச்சுக் காற்றை பதிலுக்கு எனக்கு பரிசாக கொண்டுவரவேண்டும்!
த.ஹேமாவதி
கோளூர்