ஈரைந்துத் திங்கள்
கருவறை வாசம் முடிந்து
தாயின்வலியில்
திறந்திடும் புதியபாதையில்
மண்ணில் விழுந்து
தாயின் பாலில்
முளைத்தெழும் மனிதச்செடியே!
நீவளர வளர
தெரிந்துக் கொள்வாய்! வாழ்வென்பது பலமுனைத் தாக்குதலென்று!
பாதைதெரியா
ஆழ்கடல்மீதே
பயணம்செய்து
புதிய உலகமென்று
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பசுவை நினைத்துப் பார்!
இளமையில் உனது பெற்றோர் சொல்கேள்!அதுவே அப்போது உன்பாதை!
மாணவப் பருவத்தில் ஆசானின் சொல்கேள்!பாதை தானாகவே உனக்கு புலப்படும்!
குமரப்பருவத்தில்
மயங்கி வீழாதே!
காதலில் அமிழாதே!
போதையில் மூழ்காதே!
வன்முறையில் இறங்காதே!
மனதை ஒருமுகப் படுத்து!
தியானமும் மௌனமும் உனக்கு நல்லபாதையைக் காட்டும்!
தேன்விரும்பி மலர்நாடும் தேனீயைப் போல
புலமை வேண்டி நூல்நாடி நூலகம் செல்!
முடியவில்லையென்றால்
திருக்குறள் என்ற ஒரேஒரு நூலை மட்டுமாவது படி!
நீ செல்லவேண்டிய பாதையெல்லாம் காட்டி நல்வழிப்படுத்தும்!
நமக்கு முன்னர் வாழ்ந்தோர் சென்ற பாதைகளிலே
நல்லபாதையும் உண்டு!அவற்றுள் உனக்குப் பிடித்ததொன்றைத் தேர்ந்தெடு!
தீயபாதைகளும் உண்டு!அவற்றைப் படிப்பினையாகக் கொண்டு வெட்டெனத் தள்ளு!
*எதையும் உன்னால் முடியும்*
என்றுநீ கருதினால்
உனது வாழ்வே
ஆகிடும் மற்றவருக்கு
வழிகாட்டும் *புதியபாதை*
த.ஹேமாவதி
கோளூர்