தினம் ஓர்ஓவியம் தீட்டிடும் ஓவியன்!
தீட்டும் ஓவியத்தால்
காலம் வகுப்பவன்!
வானமே தாள்!
கதிர்களே தூரிகை!
முதலில் செவ்வண்ணம்!
குழைத்துப் பூசுவான்!
கீழ்திசை வானைச்
செக்கச்செவேல் ஆக்குவான்!
பனித்திரை யாவும் மெல்ல அகற்றியே நேரம் செல்லசெல்ல வண்ணத்தை மாற்றுவான்!
தன் எண்ணப்படி
தீட்டுவான்!
பளீரெனத் வெள்ளிநிற
வெயிலால் ஒளிரும் ஓவியம் தீட்டுவான்!
உலகம் முழுவதும்
தெளிவாய்க் காட்டுவான்!
மெல்ல பகலும் நகர்கையில்
மாலைநேரந் தனில்
மஞ்சளைக் குழைத்தே பொன்னிறமாலை
உருவாக்குவான்!
தென்றலுடன் கூடி
கிளுகிளுப்பூட்டுவான்
மனதை மயக்கிய மாலையும் முடிந்து
காரிருள் சூழும்
இரவினிலோ
கருஞ்சாந்து வண்ணத்தைக் கொட்டிக் கவிழ்த்து
பரவலாய்த் தீட்டியே
காணாமல் போய்விடுவான்!
தினம்தினம் இப்படி
வண்ணந்தீட்டும்
ஓவியன் யாரெனச்
சிறுகுழந்தையைக்
கேட்டாலும் சொல்லும் அது
கதிரவன் என்று!
த.ஹேமாவதி
கோளூர்