கனமழை கொட்டினாலும்
ஒதுங்கமாட்டோம்!
வானமே
கொட்டித் தீர்த்தாலும்
சத்தியமாய் குடை
பிடிக்கமாட்டோம்!
நாங்கள்............
தாவரங்கள்!
*சிலப்பதிகாரம்
அவளின் பாதங்கள்
அடிமேல்அடி எடுத்து
நடக்கையில்
சிணுங்கிடும்
வெள்ளிமணிச் சதங்கையோசைக்கு
அவனின் சப்தநாடிகளும் அடங்கிவிடும்!
இது அவன்மீதான
அவளின் சிலப்பதிகாரம்
*அழகின் சிரிப்பு
பாரதிதாசன்
எழுதியது
நாமனைவரும்
படித்தது
இங்கோ
அவள் சிரித்தாள்!
அவன் பார்த்தான்!
எழுதா இலக்கியமாய்
அழகின் சிரிப்பு
அவளின் சிரிப்பு!
வாசகனாய் அவன்!
*எதிர்பாராத முத்தம்
கதிரவன்
சுட்டெரிக்க
தவித்தாள் நிலமங்கை!
திடீரென
கொட்டியமழை
நிலமகளை
முத்தமிட மகிழ்ந்தாள்!
குளிர்ந்தாள்!
எதிர்பாராதமுத்தம் பெற்றதால் குழைந்தாள்!
*எட்டுத்தொகை
அவனுக்கு அவளும்
அவளுக்கு அவனும்
எட்டுத்தொகை
இலக்கியங்கள் ஆனார்கள்!
விழிகள் இரண்டாலும்
உதடுகள் இரண்டாலும் கரங்கள் இரண்டாலும் கால்கள் இரண்டாலும்
தகவல்பரிமாற்றம்
செய்துக்கொள்ளும்போதெல்லாம்
எட்டுத்தொகை ஆனார்கள்!
*பத்துப்பாட்டு
அவனின்
முரட்டுவிரல்களை
அன்போடு
கோர்க்கும் அவளின்
மென்மையான
பத்துவிரல்கள்தானே
அவனுக்கு
பத்துப்பாட்டு
*பதிணெண்கீழ் கணக்கு
ஒன்றில் தொடங்கி
படிபடியாய்
இரண்டு மூன்றென
நிறைந்து
பதினெட்டில்
அடியெடுக்கும்போதில்
பதினெட்டு ஆண்டுகள் தந்த
பட்டறிவெல்லாம்
பதிணெண்கீழ்கணக்காகும்
*த.ஹேமாவதி*
*கோளூர்*