Header Ads Widget

Responsive Advertisement

மைப்பேனா

ஐந்து ருபாய்ப் பேனாவில் ஐந்து பைசா மை ஊற்றி ஐந்து நாள் எழுதிவிட்டு ஐயோ முடிந்ததென்போம்.


முனை ஒடிந்த பேனாவை மூன்று முறை உற்றுநோக்கி முனை வேறு வாங்கி வந்து முனைப்போடு மாற்றி நிற்போம்.


மையது தீர்ந்தாலும் 

முனை அது ஒடிந்தாலும் 

என் பேனா என்று சொல்லி வாஞ்சையுடன் உளம் மகிழ்வோம்.


என் சொந்தம் என்று சொல்லும்

உணர்வானது இன்று ஏனோ 

பந்துப் பேனாவில் கிடைக்கமாட்டேன் என்கிறதே.


மையது தீர்ந்துவிட்டால் மறு நினைப்பு இல்லாமல் தூரமாய்ப் போட்டுவிடும் பழக்கம் தான் வழக்குளதே.


மைப்பேனா மீதிருந்த மோகமது இன்று ஏனோ பந்துப் பேனாவில் வரமாட்டேன் என்கிறதே.


பந்துப் பேனாபோல்

பந்த சொந்தங்களும் உபயோகம் முடிந்தவுடன் ஒதுக்கிவைக்கப்பட்டால்?

அந்தோ பரிதாபம், நினைக்கக்கூட முடியவில்லை.


*சுலீ அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி*