Header Ads Widget

Responsive Advertisement

இறையன்பு அவர்கள் ஹைகூ கவிதை:

சதுரங்கக் காய்களில்


ராணிகளுக்குத் தான் மதிப்பு


அவற்றால் தான் யாரையும்


எப்படியும் வெட்ட முடியும்-


கவிழ்க்க முடியும்-


அழிக்க முடியும்.




மேலோட்டமாகப் பார்த்தால்


ராஜாக்களுக்குத்தான் சக்தி அதிகம்.


ஆனால் அந்த சக்தியைக்


கூட்டுபவர்களாகவும்


குறைப்பவர்களாகவும்,


குலைப்பவர்களாகவும்


இருப்பவர்கள் எப்போதும்


ராணிகளாய் இருக்கிறார்கள்.


சாம்ராஜ்யங்கள் பல சரிந்ததற்கு


ராஜாக்களைக்காட்டிலும்


ராணிகள் தான் காரணம்.




எவ்வளவு வலிமை பெற்ற சதுரங்கக்


காயாக இருந்தால் என்ன?


அது இருக்கும் இடத்தில் தான்


அதன் சக்தி


தீர்மானிக்கப்படுகிறது.


மூலையில் முடங்கினால்


ராணியைச் சின்ன கூனி கூட


வீழ்த்தலாம்


என்பதற்கு ராமாயணம்


மட்டுமல்ல


சதுரங்கமும் சான்று.


பக்கவாட்டிலேயே நகர்ந்தால்


நேரே வரும் பிரச்சனைகளை


எதிர்கொள்ளும் திராணி


இருக்காது என்பது


பிஷப் மூலமும்




நேரடியான எதிரிகள் மீது


மட்டுமே


கவனமிருந்தால்


மறைமுக ஆபத்துகள்


விழிகளுக்குத் தெரியாது


என்பது ரூக் மூலம்




வெளிப்படும்


வாழ்க்கைத் தத்துவம்


சதுரங்கத்தில் புலப்படும்.


சின்னச் சின்ன வெற்றிகளுக்கு


ஆசைபடாமல்


திடமான இலட்சியத்துடன்


இறுதிவரை


பயணிப்பவன்


சிப்பாயின் நிலையிலிருந்து


மிக உயர்ந்த நிலைக்கு மாற


முடியும்


என்பதற்குக் கடைசிக்


கட்டத்தில் சிப்பாய் நிலை உயரும்


காட்சியே சாட்சி.




சதுரங்கம் விளையாட்டு


மட்டுமல்ல வாழ்க்கையைக் கற்றுத் தரும்


போதனை.


இதுவரை போனவை போகட்டும்


இனிமேலாவது


விழிப்புணர்விருந்தால் போதும்.


எத்தனை காய்கள் என்பதிலும்


எப்படி அவற்றை


உபயோகப்படுத்துகிறோம்


என்பதே சூக்குமம்.


ஆனால் விளையாடி முடிந்த


பிறகும்


சதுரங்கம் கற்றுத்தருகிறது-


பெட்டிக்குள் போன பிறகு


காய்கள் எல்லாம் சமம்தான்


என்கிற உண்மையை.


மரணம்


எல்லோரையும் சமமாக்குகிறது.


அமைதியாக்குகிறது.


ஆனால்


அதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள்


தான்


முக்கியமானவை.


பெட்டிக்குள் போனால்


ஒன்று தானே


என்பதால் சதுரங்கக்காய்கள்


சும்மா இருப்பதில்லை.


இன்னும் சொல்லப்போனால்


சதுரங்கக் காய்களுக்கு ஏது


மரியாதை?


அது நம்மிடம் இருந்துதான்


ஆரம்பமாகிறது.




எதற்கு அதிக அதிகாரம்


என்பதை நாம் தான்


தருகிறோம்-


நம்மிடமிருந்து அதிகாரத்தை


அவை எடுத்துக் கொள்கின்றன.


நமது ராஜாக்களுக்கும்


ராணிகளுக்கும்


நம்மிடம் இருந்தே அதிகாரம்


அளிக்கப்பட்டிருக்கின்றன.


பல திறமைகள்


பெட்டிக்குள் முடங்கிக்


கிடக்கின்றன


உரிய களம் இல்லாமல்


நல்ல தளம் இல்லாமல்


பெட்டி என்பது


சதுரங்கப்பெட்டி மட்டுமல்ல-


சவப்பெட்டி மட்டுமல்ல


ஆற்றலை சிறைப்படுத்தும்


அனைத்துக்குமே


அவை பொருந்தும்.