கண்ணிரண்டைப் பொத்திக் கொண்டு
பிறர்கையைப் பற்றிக்கொண்டு வேகமாக நடைபயில முயற்சித்தல் போலே
தாய்மொழியாம் தமிழ்மொழி விழியாய் இருக்கையில் தமிழதை விடுத்து ஆங்கில மோகத்தால்
மேற்கத்திய கலாச்சார தாகத்தால் கண்மூடித்தனமான வேகத்தால்
இதுதான் உயர்ந்தமொழி என்ற தவறான ஊகத்தால்
ஆங்கிலவழிப் பள்ளியிலே தம்குழந்தைகளைச் சேர்க்கும்
பெற்றோரே பெற்றோரே
கொஞ்சம் நில்லுங்கள்!
தாய்ப்பால் இருக்க புட்டிப்பால் புகட்டுவீரா?
சொந்தக் காலிருக்க பிறர்தயவில் நடக்கவிரும்புவீரா?
சிந்தனை என்ற விதையை வளர்நிலமாம் தமிழ்மண்ணில் நடுவதை விடுத்து
களர்நிலமாம் அந்நியமொழியில்
நடுகின்றீரே!
சிந்தனை முளைக்குமா?பகுத்தறிவு பிறக்குமா?புலமைப்பூ பூத்திடுமா?என்பதை யோசித்தீரா?
தமிழே என்பிள்ளைக்குத் தெரியாது என்பதைச் சொல்லி பெருமைபடும் பெற்றோரே நீங்கள்
உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் பிள்ளையின் அறிவுக்கு கள்ளிப்பால் புகட்டுகிறீர்கள் என்பதை அறிவீரா?
இளந்தளிர்களுக்கு
நல்லவழி காட்டுங்கள்!
தாய்மொழி வழிக்கல்வி என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்!
த.ஹேமாவதி
கோளூர்