பெற்றோரை இழந்துவிட்டு, உற்றாரை எதிர்பார்த்துக்
கண்ணீருடன் நிற்கின்ற பிள்ளைகளைப் பார்க்கையிலே
என்னையும் அறியாமல் என் இதயம் சொல்கிறது
இறைவா
இறைவா இவர்களைக் காப்பாற்று.
நோயிலே வாடுகின்ற மனிதர்களைச் சூழ்ந்து கொண்டு
அவர் நலன் வேண்டி நிற்கும்
நட்புறவைக் காண்கையிலே
கனத்துவிட்ட இதயமுடன் நான் வேண்டி நிற்கின்றேன்
இறைவா
இறைவா அவர்களைக் காப்பாற்று.
பிள்ளைகளை இழந்துவிட்டு, பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு இனியெமக்கு யாருளரோ? என்றே வெதும்பி நிற்கும்
பெற்றோரைப் பார்க்கையிலே
பரிவுடனே நான் சொல்வேன்
இறைவா
இறைவா இவர்களைக் காப்பாற்று.
உடனிருந்த தன் உறவு இறந்த பின்னும் நம்பாமல்
அதனையே சுற்றிவரும் மிருகங்களைப் பார்க்கையிலே இயலாமையை நினைத்தவாறே இறைவனிடம் நான் கேட்பேன்
இறைவா
இறைவா இவைகளைக் காப்பாற்று.
கவனிக்க ஆளின்றித் தண்ணீர் கூட இல்லாமல்
வாடி வதங்கி நிற்கும் மரம் செடியைக் காண்கையிலும் என்னையும் அறியாமல் இரக்கமுடன் நான் சொல்வேன்
இறைவா
இறைவா இவைகளைக் காப்பாற்று,
இறைவா அனைவரையும் காப்பாற்று.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*