நானும் கூட பாதிக்கப்பட்டேன்,
நான்காண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்டேன்,
வேலைசெய்த இடத்திலே பாதிக்கப்பட்டேன்,
வெறி பிடித்த மிருகத்தால் பாதிக்கப்பட்டேன்.
துணிவுடன் சொல்கின்றனர் சில பெண்கள் இன்று,
துயரத்தை வெளிப்படுத்தி நிமிர்கின்றனர் இன்று,
போற்றுவோம் அந்தப் புரட்சி மலர்களை,
தூற்றுவோம் அந்த வெறிபிடித்த பதர்களை.
உள்ளுக்குள் புழுங்கி வீட்டுக்குள் ஒதுங்கி அழுதுபுலம்பிய காலத்தைவிட்டு,
சொல்லால் அடித்து சந்திக்கு இழுத்து நியாயத்தைக் கேட்டிடும் பெண்களைப் போற்றுவோம்.
சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொண்டு
சதியால் சிலரை வசமாக்கிக்கொண்டு
பிரபலம் என்ற போர்வையில் தவறாக நடக்கின்ற அற்ப உயிர்களை உலகுக்குக் காட்டுவோம்.
அந்நாளில் மறுக்காமல் இணக்கமாய் இருந்துவிட்டு
பின்நாளில் தவறென்று தெரிகின்றவேளையில்
பழிவாங்கும் எண்ணத்தில் பழிசுமத்தி மகிழ்கின்ற பழக்கமது வராமல் இருக்கவும் வேண்டுவோம்.
சுலீ. அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.