Header Ads Widget

Responsive Advertisement

யார்தான் பகிர்ந்துக் கொள்வார்?


கண்பார்த்து காதலாகிப் பெரியோரால் நிச்சயித்து ஒருத்தியை ஒருவன் கைபிடித்து

ஈருடல்ஓருயிராய்

அவன்வேறு அவள்வேறு என்றில்லாமல்

அவனுக்குள் அவளும் அவளுக்குள் அவனும் ஒன்றெனக் கலந்து குலாவி 

கலவியில் நீந்திட முத்தொன்று விளைந்ததாய் அந்த ஒருத்தியின் மணிவயிற்றில் கர்ப்பந் தரித்திட

யாவரும் மகிழ்ந்து

ஐந்தாம் மாதத்தில்

ஐந்துவித சோறூட்டி

ஐந்துவித மலராலே

கூந்தலிலேபூச்சூட்டி

ஐந்துவித வளையலைக் கையிரண்டில் பூட்டி

காற்று கருப்பு என்ற

தீயவை அணுகாதிருக்க கருமைநிற வளையலும்

தாய்க்கும் சேய்க்கும் இரத்தம் நல்ல ஊட்டமாயிருக்கவேண்டி சிவப்புநிற வளையலும்

பிறக்கின்ற சேய்க்கு வளமான வாழ்வமைய பச்சைநிற வளையலும் அன்பும் சாந்தமும் பொங்கிடவே வெண்மைநிற வளையலும்

பிரசவம் சுகமாய் நடக்கவேண்டி மங்களகரமான மஞ்சள்நிற வளையலும் சுமங்கலித்தாய்மார்கள்

பூட்டி அழகுபார்த்து

ஏழாம் மாதத்திலே ஊர்கூட்டி நலுங்குவைத்து

கூந்தலிலே பூவாலே காப்பு!

முகத்திலே மஞ்சளாலே காப்பு!

நெற்றியிலே குங்குமத்தால் காப்பு!

மேனிக்கு பச்சைவண்ணப் பட்டுச்சேலையாலே காப்பு!

கையிரண்டிலும்

வண்ணவண்ண வளையல்களாலே காப்பு!

அவள்நலத்திற்கு

கனிகளாலும் சுட்ட பலகாரங்களாலும்

காப்பு!

அவள்பக்கத்தே

கட்டிய கணவன் காப்பு!

இத்தனை காப்புகளும் நாம் தந்தாலும் சூலுற்ற பெண்

குழவி ஈனும்போதில்

ஏற்படும் பிரசவவலியினைப் 

பகிர்வார் யாருண்டு?அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும் என்ற பழமொழிதான் எத்துணை உண்மையானது!


த.ஹேமாவதி

கோளூர்